கார்கேயுடன் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி சந்திப்பு!: முதல்வர் பதவிக்கு 'துண்டு' போட்டதாக பரபரப்பு
கார்கேயுடன் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி சந்திப்பு!: முதல்வர் பதவிக்கு 'துண்டு' போட்டதாக பரபரப்பு
ADDED : அக் 05, 2024 05:04 AM

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை, பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி டில்லியில் திடீரென சந்தித்து பேசினார். முதல்வர் பதவிக்கு, 'துண்டு' போட்டதாக, கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.
மைசூரு, 'முடா'வில் இருந்து, மனைவிக்கு 14 வீட்டுமனைகள் வாங்கி கொடுத்த விவகாரத்தில், முதல்வர் சித்தராமையா வசமாக சிக்கி உள்ளார். அவர் மீது லோக் ஆயுக்தா, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து உள்ளது. சி.பி.ஐ.,யும் விசாரிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
'சித்தராமையா பதவி விலக வேண்டும்' என்று, எதிர்க்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர். எக்காரணம் கொண்டும் விலக மாட்டேன் என்று, அவர் பிடிவாதமாக உள்ளார். ஆனால் வரும் நாட்களில், அவர் மீதான நெருக்கடி அதிகரிக்கலாம். ராஜினாமா செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
ஒருவேளை சித்தராமையா ராஜினாமா செய்தால், முதல்வர் பதவியை பிடிப்பதில், துணை முதல்வர் சிவகுமார், காங்கிரஸ் மூத்த அமைச்சர்கள் இடையில் கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
குறிப்பாக, சீனியர்களான தலித் சமூகத்தை சேர்ந்த உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, உணவுத் துறை அமைச்சர் முனியப்பா ஆகியோருக்கு, முதல்வர் பதவி மீது ஆசை வந்து உள்ளது.
நாங்கள் ரெடி
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், மேற்கண்ட அமைச்சர்கள் ரகசிய ஆலோசனையும் நடத்தி இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் டில்லி சென்ற சதீஷ் ஜார்கிஹோளி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்தார். இருவரும் அரை மணி நேரத்திற்கு மேல் பேச்சு நடத்தினர்.
அப்போது, 'முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்யும் சூழல் ஏற்பட்டால், நான் உட்பட அமைச்சர்கள் சிலர், முதல்வர் ஆக ரெடியாக உள்ளோம். நமது சமூகத்திற்கு முதல்வர் பதவி கிடைப்பது இல்லை. இந்த முறை வாய்ப்பு வந்தால், நமக்கு வாய்ப்பு கிடைக்க நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும்' என்று, சதீஷ் ஜார்கிஹோளி கூறியதாக, தகவல் வெளியாகி உள்ளது.
'சதீஷ் ஜார்கிஹோளி தான் அடுத்த முதல்வர்' என, கடந்த மாதம் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் போஸ்டர் வெளியிட்டனர். அதற்கு பதில் அளித்த அவர், 'இப்போது முதல்வர் பதவி மீது ஆசை இல்லை. ஆனால், 2028ல் கண்டிப்பாக முதல்வர் ஆவேன்' என்று கூறி, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்படி கூறிவிட்டு, தற்போது மல்லிகார்ஜுன கார்கேயை திடீரென சந்தித்து பேசியதால், கர்நாடக காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அறிகுறி இல்லை
இது குறித்து, பெலகாவி நிப்பானியில் சதீஷ் ஜார்கிஹோளி நேற்று அளித்த பேட்டி:
முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் டில்லி சென்றால், மல்லிகார்ஜுன கார்கேயை சந்திப்பது வழக்கம். அதுபோல நானும் அவரை சந்தித்தேன். இதற்கு புது அர்த்தம் கற்பிக்க வேண்டாம்.
நான் முதல்வர் பதவிக்கு முயற்சி செய்யவில்லை. அந்த பதவி காலியாகவும் இல்லை. மாநில அரசியலில் புதிய வளர்ச்சிக்கான அறிகுறியே இல்லை. இதுபற்றி கார்கேயிடம் பேசினேன்.
'முடா' பிரச்னையில் ராஜினாமா செய்யும்படி, சித்தராமையாவுக்கு கட்சி அழுத்தம் கொடுக்கவில்லை. நாங்கள் அவருடன் உள்ளோம். எதிர்க்கட்சிகள் பிரச்னையை ஊதி பெரிதாக்க பார்க்கின்றன. சட்டரீதியாக நாங்கள் போராடுவோம். அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. உண்மையை வெளி கொண்டு வரட்டும். பெலகாவியில் நான் நிலத்தை அபகரித்து இருப்பதாக, பா.ஜ., மாநில பொது செயலர் ராஜிவ் கூறுகிறார். யார், எங்கு நிலத்தை அபகரித்தனர் என்பது பற்றி, பிறகு தெளிவாக சொல்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் கூறுகையில், ''எங்கள் தலைவர் கார்கேயை, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி சந்தித்ததில் எந்த சிறப்பும் இல்லை. அவர் முதல்வர் ஆவாரா என்று எனக்கு தெரியாது. அதுபற்றி மேலிடம் தான் முடிவு எடுக்கும். எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு பெறும் நபரே முதல்வர் ஆவார்,'' என்றார்.