மிளகாய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அமைச்சர் சிவானந்த பாட்டீல் வலியுறுத்தல்
மிளகாய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அமைச்சர் சிவானந்த பாட்டீல் வலியுறுத்தல்
ADDED : மார் 14, 2024 06:28 AM

ஹாவேரி : ''மிளகாய் பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய, மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும்,'' என, விவசாய சந்தை துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல் தெரிவித்தார்.
'பேடகி மிளகாய்' திடீர் விலை வீழ்ச்சியால், ஹாவேரியில் உள்ள ஏ.பி.எம்.சி., என்ற விவசாய உற்பத்திப் பொருட்கள் சந்தையில் உள்ள அலுவலகத்தை, விவசாயிகள் அடித்து நொறுக்கினர்.
பின், அங்கிருந்து 14 வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர். இது தொடர்பாக, 81 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், விவசாய சந்தை துறை அமைச்சர் சிவானந்த பாட்டீல், நேற்று ஹாவேரி ஏ.பி.எம்.சி.,யை ஆய்வு செய்தார். பின், அவர் அளித்த பேட்டி:
இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது. பொதுவாக விவசாயிகள், தாங்கள் பயிரிடும் பயிருக்கு சரியான விலை கிடைக்காவிட்டால், எந்த விதத்திலும் எதிர்வினையாற்றலாம். இப்படி செய்திருக்கக் கூடாது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற கோபம் நாட்டில் நிலவுகிறது.
விவசாயிகளின் உற்பத்திப் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை, நாடு முழுதும் அமல்படுத்த வேண்டும்.
மிளகாய் பயிருக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய, மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும்.
விவசாயிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த வேறு பல வழிகள் உள்ளன. ஆனால் இத்தகைய பாதை சரியில்லை.
இங்குள்ள வியாபாரிகள் எங்கள் துறையிடமோ அல்லது தலைவரிடம் கோரிக்கை வைத்தால் சரி செய்திருக்கலாம். தவறான புரிதலை தீர்த்திருக்கலாம். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம்.
வெகு சில குண்டர்கள் தான், பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பர். அப்படிப்பட்டவர்கள் மீது இரக்கமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

