இசை நிகழ்ச்சியில் ராமர் பாடல் பாடியதால் பாதியில் வெளியேறிய அமைச்சர் வெங்கடேஷ்
இசை நிகழ்ச்சியில் ராமர் பாடல் பாடியதால் பாதியில் வெளியேறிய அமைச்சர் வெங்கடேஷ்
ADDED : ஜன 29, 2024 07:36 AM
சாம்ராஜ்நகர்: இசை நிகழ்ச்சியில், ராமர் பாடலை பாடியதால், கால்நடைத்துறை அமைச்சர் வெங்கடேஷ் கோபத்தில் எழுந்து சென்றார்.
கர்நாடகா என பெயர் சூட்டப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, சாமராஜ்நகரின், சாமராஜேஸ்வரா கோவில் வளாகத்தில், நேற்று மாலை மாவட்ட நிர்வாகம் சார்பில், இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
கன்னட திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர் அர்ஜுன் ஜன்யா தலைமையில், இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் கால்நடைத்துறை அமைச்சர் வெங்கடேஷ் பங்கேற்றிருந்தார். பாடகர்கள் பல பாடல்களை பாடினர்.
அப்போது நடிகர் தர்ஷன் நடித்த, ராபர்ட் திரைப்படத்தில் இடம் பெறும், 'ராமன் வருவான், அவன் பின்னே ஹனுமன் இருந்தே இருப்பான்' என்ற வரிகள் கொண்ட பாடல் பாடப்பட்டது.பாடல் துவங்கியதும், அமைச்சர் வெங்கடேஷ் கோபத்துடன் எழுந்து, வெளியே சென்றாராம்.
அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நிகழ்ச்சியை, காங்கிரஸ் புறக்கணித்தது. ஆனால் முதல்வர் சித்தராமையா உட்பட, காங்கிரஸ் தலைவர்கள் நாங்களும் ராம பக்தர்கள்தான்; கோவிலுக்கு செல்வோம் என, கூறி வந்தனர். ஆனால் அமைச்சர் வெங்கடேஷ், ராமர் பாடலை கேட்டு நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறியது, சலசலப்பை ஏற்படுத்தியது.