காலில் விழுந்தால் வேலை நடக்காது! வேற லெவலில் ஆர்டர் போட்ட மத்திய அமைச்சர்
காலில் விழுந்தால் வேலை நடக்காது! வேற லெவலில் ஆர்டர் போட்ட மத்திய அமைச்சர்
ADDED : டிச 30, 2024 11:38 AM

போபால்: காலில் விழுந்து வணங்கினால் எந்த வேலையும் செய்து கொடுக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் ஒருவர் நூதன உத்தரவை போட்டுள்ளார்.
வட இந்தியாவில் பொதுவாக ஒரு கலாசாரம் உண்டு. தம்மை விட வயதில் முதிர்ந்தவர்கள், தாம் பெருமையாக நினைப்பவர்கள், நாம் மதிப்பவர்கள் ஆகியோரின் கால்களை தொட்டு வணங்குவது வழக்கம். அவர்களை அன்றைய நாளில் எத்தனை முறை சந்தித்தாலும் இந்த வழக்கத்தை அவர்கள் பின்பற்றி வருகின்றனர்.
இதே வழக்கம், அரசியல் தலைவர்களை காணும் தொண்டர்களுக்கும் உண்டு. தலைவர்களை அமைச்சர்களை எங்கு பார்த்தாலும் அவர்களை பாதம் தொட்டு ஆசீர்வாதம் வாங்கி செல்லுவர்.
இந் நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் இனி யாரும் எனது காலை தொட்டு வணங்கினால் அவர்களுக்கான எந்த வேலையும் யாரும் செய்து தரக்கூடாது என்று புதுமாதிரியான உத்தரவை போட்டுள்ளார். அந்த அமைச்சர் பெயர் வீரேந்திர குமார். 1996ம் ஆண்டு முதல் எம்.பி.யாக வெற்றி பெற்று வருகிறார்.
தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திகம்கர்க் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சராக இருக்கிறார்.
திகம்கர்க் தொகுதியில் உள்ள தமது எம்.பி., அலுவலகம் வரும் மக்கள், தொண்டர்கள், ஆதரவாளர்கள் என யாரும் தனது பாதம் தொட்டு வணங்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். அதை மீறி யாரேனும் அப்படி செய்தால் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடாது என்றும் கறாராக கூறி இருக்கிறார்.
அமைச்சரின் கறார் உத்தரவை அறிந்த பொதுமக்கள் பெரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர். எதற்காக இந்த உத்தரவு என்றும் அவர்களுக்காகவே கேள்வியையும் எழுப்பியபடி செல்கின்றனர்.