ADDED : ஜன 29, 2025 09:06 AM
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த அரசு ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகின்றன. ஆட்சிக்கு வந்த புதிதில் அமைச்சர்கள் அனைவரும் தங்கள் துறையில் சுறுசுறுப்பாக வேலை செய்வதாக காட்டிக் கொண்டனர். தினமும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
ஆனால், கடந்த பல மாதங்களாக சில அமைச்சர்களின் செயல்பாடுகள் சுத்தமாக சரியில்லை.
தங்கள் துறையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் உள்ளனர். விதான் சவுதாவில் உள்ள தங்களது அலுவலகத்திற்கு செல்வதையே மறந்து விட்டனர். தொகுதிக்கும் சரியாக செல்வதில்லை.
கட்சி பணிகளிலும் சரியாக ஈடுபடுவது இல்லை. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதி தொடர்பாக வைக்கும் கோரிக்கைகளுக்கு கூட, சில அமைச்சர்கள் சரியாக செவி சாய்ப்பதில்லை என்றும் குற்றச்சாட்டு அடிக்கடி எழுகிறது.
குறிப்பாக, கனிமவள துறை டி. சுதாகர், உயர்கல்வி எம்.சி. சுதாகர், நகராட்சி நிர்வாகம் ரஹீம்கான், சிறிய தொழில் சரணபசப்பா தர்ஷனாபூர், ஜவுளி சிவானந்தா பாட்டீல், மீன்வளம் மங்கள் வைத்யா ஆகிய அமைச்சர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று அடிக்கடி புகார்கள் எழுகின்றன.
இந்நிலையில், சரியாக செயல்படாத அமைச்சர்கள் பெயர் பட்டியலை தங்களுக்கு அனுப்பும்படி கட்சி மேலிடம் கேட்டு கொண்டது. மேற்கண்ட அமைச்சர்கள் உட்பட மேலும் சில அமைச்சர்கள் பெயரை, கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சரியாக செயல்படாதவர்களை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மேலிடத்தில், முதல்வரும் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் வர இருக்கும் மாவட்ட, தாலுக்கா பஞ்சாயத்து தேர்தல்களை மனதில் வைத்து சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்குவதில் மேலிடம் தயக்கம் காட்டுகிறது.
தேர்தல் முடிந்தபின் சில அமைச்சர்கள் நீக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் சரியாக செயல்படாதவர்கள் என்ற பெயர் எடுத்திருக்கும் அமைச்சர்கள், தற்போது சுறுசுறுப்பாக வேலை செய்ய ஆரம்பித்துள்ளனர்.
தினமும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி, தங்களது துறையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து வருகின்றனர்.
- -நமது நிருபர் --

