அமைச்சரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அமைச்சரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
ADDED : பிப் 10, 2024 11:26 PM
ராய்ப்பூர், சத்தீஸ்கர் மாநில உணவுத்துறை அமைச்சர் இல்லத்திற்கு பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட ஆயுதப்படை காவலர், நேற்று அதிகாலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அவரது அமைச்சரவையில் உணவுத் துறை அமைச்சராக இருப்பவர் தயால்தாஸ் பாகேல். ராய்ப்பூரின் ஸ்டேஷன் சாலையில் இவரது வீடு அமைந்துள்ளது.
இங்கு பாதுகாப்புக்காக ஆயுதப்படை காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ரோஹித் சலாமே எனும் காவலர் நேற்று பணியில் இருந்தார். அதிகாலை 2:00 மணிக்கு அவரது பணி முடிந்த நிலையில், அதன் பின் சிறிது நேரத்தில் தன் சர்வீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்தம் கேட்டு சக காவலர்கள் ஓடிச் சென்று பார்த்த போது, ரோஹித் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் கூறுகையில், 'சத்தீஸ்கரின் பலோத் மாவட்டத்தைச் சேர்ந்த ரோஹித் நீண்ட விடுப்புக்கு பின் கடந்த வாரம் தான் பணியில் சேர்ந்தார்.
'இந்நிலையில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை குறிப்புகள் எதுவும் அவர் எழுதி வைக்கவில்லை. விசாரணை நடக்கிறது' என்றனர்.