பிரஹாத் ஜோஷி மீது நடவடிக்கை கவர்னரிடம் அமைச்சர்கள் புகார்
பிரஹாத் ஜோஷி மீது நடவடிக்கை கவர்னரிடம் அமைச்சர்கள் புகார்
ADDED : நவ 12, 2024 06:07 AM

பெங்களூரு: ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மீது நடவடிக்கை எடுக்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், அமைச்சர்கள் தினேஷ் குண்டுராவ், கிருஷ்ணபைரே கவுடா மனு அளித்தனர்.
'கொரோனா காலகட்டத்தின்போது, பா.ஜ., ஆட்சியில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்ததில், முறைகேடு நடந்துள்ளது. அப்போதைய முதல்வர் எடியூரப்பா, அமைச்சர் ஸ்ரீராமுலு மீது விசாரணை நடத்தலாம்' என, ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா, தனது அறிக்கையில் பரிந்துரை செய்திருந்தார்.
இதற்கு மத்திய உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, 'கொரோனா முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா, ஏஜென்ட் போன்று செயல்படுகிறார்' என குறிப்பிட்டிருந்தார்.
* எதிர்ப்பு
இதற்கு காங்கிரசார் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
நேற்று காலை கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, அமைச்சர்கள் தினேஷ் குண்டுராவ், கிருஷ்ணபைரே கவுடா புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், 'ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையிலான விசாரணை ஆணையம், கொரோனா முறைகேடு குறித்து இடைக்கால அறிக்கை அளித்துள்ளது. இதை மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விமர்சித்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்ய வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
பின், தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:
ஓய்வு பெற்ற நீதிபதி குறித்து, பிரஹலாத் ஜோஷி பேசியது, 'ஈகோ'வின் உச்சகட்டம். ஜோஷி சாதாரண குடிமகன் அல்ல; மத்திய அமைச்சர். அரசியல் அமைப்பில் உள்ள தன்னாட்சி அமைப்புகள், கமிஷன்கள் மீதான தனிப்பட்ட விமர்சனம் சரியல்ல. இது ஜனநாயகத்துக்கு எதிரானது.
நீதிபதிகளின் கண்ணியத்தை அவமதிக்கும் வகையில் பேசியது தவறு. விசாரணை கட்டடத்தில் இருக்கும்போது, இப்படி யாரும் பேசக்கூடாது. இது தொடர்பாக கவர்னரிடம் விளக்கம் அளித்து, அவர் மீது நடவடிக்கை எடுக்க கூறி உள்ளோம். உயர் பதவியில் இருக்கும் நாம், கமிஷன்களின் மரியாதையை பாதுகாக்க வேண்டும்.
இது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். மத்திய அரசில் அங்கம் வகிப்பதால், எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கின்றனர். இனி வரும் நாட்களில், அவ்வாறு பேசினால், மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறுப்பு
ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹாவை, ஏஜென்ட் என்று கூறவில்லை. ஏஜென்ட் போன்று செயல்பட வேண்டாம் என்றேன். எனக்கு, அவர் மீது தனிப்பட்ட பகையோ, பொறாமையோ இல்லை. காங்கிரஸ் அவசரப்பட்டு புகார் அளித்துள்ளது. எடியூரப்பாவுக்கு நோட்டீஸ் வரவில்லை. செயல்முறை பின்பற்றப்படவில்லை. இதை செய்யாதீர்கள்; நியாயமான முறையில் விசாரணை நடத்துங்கள் என்றேன். எடியூரப்பா மீது வழக்கு தொடர பரிந்துரைத்தது, ஊடகங்களில் பார்த்து தான், அவர் தெரிந்து கொண்டார்.
பிரஹலாத் ஜோஷி
மத்திய அமைச்சர்