திட்டவட்டம்!: மிரட்டலுக்கு பணிந்து நடக்க மாட்டோம்: அமெரிக்க வரி குறித்து அமைச்சர்கள் விளக்கம்
திட்டவட்டம்!: மிரட்டலுக்கு பணிந்து நடக்க மாட்டோம்: அமெரிக்க வரி குறித்து அமைச்சர்கள் விளக்கம்
ADDED : ஏப் 13, 2025 01:12 AM

புதுடில்லிஅமெரிக்கா பரஸ்பர வரி போரை நடத்தி வரும் நிலையில், அதனுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சிகள் வேகமெடுத்துள்ளன. “துப்பாக்கி முனையில் பேச்சு நடத்த மாட்டோம். மிரட்டலுக்கு பணிய மாட்டோம்,” என, மத்தியவர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார். ''நாட்டின் நலனே முக்கியம்; அதில் சமரசம் கிடையாது'' என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பரஸ்பர வரி என்ற போரை நடத்தி வருகிறார். சீனா மீது கடுமையான வரியை அறிவித்துள்ள அவர், மற்ற நாடுகள் மீது விதித்துள்ள வரியை செயல்படுத்துவதை, 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளார்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவுடன் நம் நாடு வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பான பேச்சு வேகம் எடுத்துள்ளது.
இதுகுறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளதாவது:
துப்பாக்கி முனையில் பேச்சுகள் நடப்பதில்லை. அதுபோல எந்த ஒரு விஷயத்திலும் வேகம் இருக்குமே தவிர, அவசரப்பட மாட்டோம். நம் நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். அதற்கு எதிராக இருந்தால், எந்த ஒரு நிபந்தனையையும், ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம்; மிரட்டலுக்கு பணிய மாட்டோம்.
தற்போது நேரம் குறைவு என்ற நிலை உள்ளதால், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்வதில் வேகம் காட்டுகிறோம். அது ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. ஆனால், எந்த கட்டத்திலும், நாட்டின் நலனை விட்டுத்தர மாட்டோம்.
வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக, அமெரிக்காவைத் தவிர பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், வேறு சில நாடுகளுடனும் பேசி வருகிறோம். இந்த அனைத்திலும், இந்தியாவின் நலனை முன்னிறுத்துதல், 2047ல் வளர்ந்த நாடு இலக்கை எட்டுவது ஆகியவை கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:
வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக, பல நாடுகள், அமைப்புகளுடன் பேசி வருகிறோம். வர்த்தகம் தொடர்பாக உலக அளவில் ஓராண்டுக்கு முன் இருந்ததைவிட, நிலவரம் தற்போது மாறியுள்ளது. அதற்கேற்பவே நாம் செயல்பட வேண்டும். அந்த வகையில், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் வேகம் காட்டுகிறோம்.
இது ஒரு வாய்ப்பாகவும் நமக்கு அமைந்துள்ளது. ஐரோப்பிய யூனியனுடன், 30 ஆண்டுகளாக பேசி வருகிறோம் என்று கூறுகின்றனர்; இது சரியான வாதம் அல்ல. முதலில், அது அதிக நாடுகளைக் கொண்ட ஒரு அமைப்பு.
அந்த அமைப்பில் உள்ளவர்களுக்கு இடையே ஒரு முடிவு ஏற்படாத நிலையில், பேச்சில் எப்படி வெற்றி கிடைக்கும். இந்த பேச்சுகளின் போது, நாட்டின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதில் எந்த ஒரு சமரசமும் செய்ய மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.