போலீஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் அமைச்சர்கள் கொள்ளை! முன்னாள் ஐ.பி.எஸ்., பாஸ்கர் ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு
போலீஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் அமைச்சர்கள் கொள்ளை! முன்னாள் ஐ.பி.எஸ்., பாஸ்கர் ராவ் பரபரப்பு குற்றச்சாட்டு
ADDED : ஆக 07, 2024 06:06 AM

பெங்களூரு: போலீஸ் அதிகாரிகள் இடமாற்றத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதாக, முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும், பா.ஜ., பிரமுகருமான பாஸ்கர் ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. காங்., ஆட்சிக்கு வந்தபின் நிர்வாக காரணங்களுக்காக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்பின் எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். லட்சக்கணக்கில் பணம் வாங்கி கொண்டு போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதாக, அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதை உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மறுத்தார்.
மேலிட அழுத்தம்
யாத்கிர் 'சைபர் கிரைம்' எஸ்.ஐ., பரசுராம் சமீபத்தில், மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.
இவருக்கு, இடமாறுதல் வழங்க, காங்கிரஸ் எம்.எல்.ஏ., சன்னரெட்டி பாட்டீல் துன்னுார், அவரது மகன் பாம்பண்ண கவுடா ஆகியோர் 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது, சன்னரெட்டி பாட்டீலும், அவரது மகனும் தலைமறைவாக இருக்கின்றனர்.
இந்நிலையில், விருப்ப ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், பா.ஜ., பிரமுகருமான பாஸ்கர் ராவ், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
பொதுமக்களிடம் இருந்து பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்று, போலீஸ் துறைக்கு, கர்நாடக அரசு அழுத்தம் கொடுக்கிறது.
ஓராண்டாக குறைப்பு
மாதம் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று, போலீஸ் அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயித்து உள்ளனர். இதனால், போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் அழுத்தத்தின் கீழ் வேலை செய்கின்றனர்.
மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசார், தற்போது தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும் விஷயத்தில் கொள்ளை அடிக்கின்றனர்.
போலீஸ் துறை தற்போது முற்றிலும் நலிவடைந்து உள்ளது. பா.ஜ., ஆட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை போலீசாரை பணியிட மாற்றம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது.
ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின் ஓராண்டாக குறைக்கப்பட்டது. ஆனால், இப்போது ஆறு மாதங்களிலேயே பணியிட மாற்றம் நடக்கிறது.
வலுவற்ற முதல்வர்
இதனால், போலீசாரால் நிம்மதியாக வேலை செய்ய முடியவில்லை. ஒரே இடத்தில் பணியை தொடர லட்சக்கணக்கில், ஆளும் கட்சியினர் லஞ்சம் கேட்கின்றனர். நேர்மையான அதிகாரி பரசுராம் மரணம் வருத்தமளிக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் நேர்மையாக பணியாற்றும் அதிகாரிகள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை.
வலுமையான முதல்வர் இருந்தால், மாநிலத்தில் ஊழல் நடக்காது. ஆனால், முதல்வர் வலுவற்றவராக உள்ளார். அவரது மூக்கின் கீழ் நடக்கும் முறைகேடுகளை கூட அவரால் தடுக்க முடியவில்லை.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை பணம் பறிக்கும் ஓநாய்களாக செயல்பட முதல்வர் அனுமதித்து உள்ளார். எஸ்.ஐ., பரசுராம் தற்கொலை குறித்து சி.ஐ.டி., விசாரிக்கிறது. அதில் நியாயம் கிடைக்கும் என்று எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனால் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாஸ்கர் ராவ், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றியவர். பணியில் இருக்கும் போதே விருப்ப ஓய்வு பெற்று, பா.ஜ.,வில் இணைந்தார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், பெங்களூரு சாம்ராஜ்பேட் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.