ADDED : பிப் 01, 2025 02:46 AM

விஜயநகரா : வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கானின் மகன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு, வனத்துறை தடை விதித்துள்ளது.
அமைச்சர் ஜமீர் அகமது கானின் மகன் ஜைத் கான், சில படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது 'கல்ட்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். படக்குழுவினரின் குளறுபடியால் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
விஜயநகரா, ஹொஸ்பேட், ஹம்பி விருபாபுரா அருகில் துங்கபத்ரா ஆற்றங்கரையில் உள்ள வனப்பகுதியில், சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்பகுதியில் அபூர்வமான விலங்குகள் வசிக்கின்றன; தாவரங்களும் உள்ளன. இத்தகைய பகுதியில் படக்குழுவினர் தீ எரித்து, படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, படப்பிடிப்புக்கு அனுமதி பெறாததும் தெரிய வந்தது. எனவே படப்பிடிப்புக்கு தடை விதித்து, வனத்துறை உத்தரவிட்டது. படக்குழுவினர் படப்பிடிப்பை :நிறுத்தினர்.
சமீபத்தில் யஷ் நடிக்கும், 'டாக்சிக், ரக்ஷித் ஷெட்டியின் 'காந்தாரா 2' படங்களின் படப்பிடிப்பு வனப்பகுதியில் நடத்தியதால், சர்ச்சை எழுந்தது.
வனத்துறையின் உத்தரவுப்படி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதை தீவிரமாக கருதிய வனத்துறை திரைப்படம், சின்னத்திரை, டாக்குமென்டரி படப்பிடிப்பு நடத்த வனத்துறையிடம் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கியது. ஆனால் இந்த உத்தரவை படக்குழுவினர் பொருட்படுத்துவதில்லை.