கான்ட்ராக்டர் தற்கொலை வழக்கு அமைச்சர் ஆதரவாளருக்கு காவல்
கான்ட்ராக்டர் தற்கொலை வழக்கு அமைச்சர் ஆதரவாளருக்கு காவல்
ADDED : ஜன 11, 2025 04:52 AM
பீதர்: கான்ட்ராக்டர் சச்சின் தற்கொலை வழக்கில், அமைச்சர் பிரியங்க் கார்கே ஆதரவாளர் உட்பட ஐந்து பேரை சி.ஐ.டி., காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பீதர் பால்கி கட்டிங்காவ் கிராமத்தின் சச்சின் மோனப்பா பாஞ்சால், 26. கான்ட்ராக்டர். கடந்த மாதம் 26ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு, கலபுரகி மாநகராட்சி காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் ராஜு கப்பனுார் உட்பட 9 பேர் தான் காரணம் என்று, மரண கடிதத்தில் எழுதி வைத்து இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சி.ஐ.டி., போலீசார் ராஜு கப்பனுார், கலபுரகி மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் கோரக்நாத், காங்கிரஸ் பிரசார குழு தலைவர் நந்தகுமார், கான்ட்ராக்டர்கள் ராமகவுடா பாட்டீல், சதீஷ் உட்பட ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பீதரில் டி.எஸ்.பி., சுலைமான் தாசில்தார் தலைமையிலான போலீசாரும் விசாரித்தனர்.
இந்நிலையில் ராஜு கப்பனுார், கோரக்நாத், நந்தகுமார், ராமகவுடா பாட்டீல், சதீஷ் ஆகியோரை நேற்று சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். ஐந்து பேரையும் பீதர் ஜே.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஐந்து பேரையும் ஐந்து நாட்கள் சி.ஐ.டி., காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ராமமூர்த்தி அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
ராஜு கப்பனுார், அமைச்சர் பிரியங்க் கார்கேயின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.