கான்ட்ராக்டர் தற்கொலை வழக்கு அமைச்சர் ஆதரவாளர் சிறையில் அடைப்பு
கான்ட்ராக்டர் தற்கொலை வழக்கு அமைச்சர் ஆதரவாளர் சிறையில் அடைப்பு
ADDED : ஜன 19, 2025 07:01 AM
பீதர்: கான்ட்ராக்டர் சச்சின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, அமைச்சர் பிரியங்க் கார்கேயின் ஆதரவாளர் ராஜு கப்பனுார் உட்பட ஐந்து பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பீதர் மாவட்டம், பால்கி கட்டிங் காவ் கிராமத்தைச் சேர்ந்தவர் சச்சின் மோனப்பா பாஞ்சால், 26 கான்ட்ராக்டர். கடந்த மாதம் 26ம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், கர்நாடக கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கேயின் ஆதரவாளர் ராஜு கப்பனுார் உட்பட ஐந்து பேர் பெயரை குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் சி.ஐ.டி., போலீசார், ராஜு கப்பனுார், அவரது ஆதரவாளர்கள் கோரக்நாத், நந்தகுமார், ராமகவுடா, சதீஷ் ஆகிய ஐந்து பேரை கடந்த 10ம் தேதி கைது செய்தனர்.
மறுநாள் ஐந்து பேரும் பீதர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை, ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி ராமமூர்த்தி அனுமதி அளித்தார்.
ஐந்து நாட்கள் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 15ம் தேதி போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில், ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மேலும் நான்கு நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேற்கொண்டு அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸ் தரப்பு அனுமதி கேட்காததால், ஐந்து பேரையும் 14 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி ராமமூர்த்தி உத்தரவிட்டார். இதையடுத்து ஐந்து பேரும் பீதர் சிறையில் அடைக்கப்பட்டனர்.