அலிகார் முஸ்லிம் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்து உறுதி
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்து உறுதி
ADDED : நவ 09, 2024 12:29 AM

புதுடில்லி,உத்தர பிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலையை சிறுபான்மையினர் கல்வி நிறுவனமாக கருத முடியாது என, 1967ல் வழங்கப்பட்ட தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.
இந்த வழக்கில், ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு, 4:3 என்ற விகிதத்தில் மாறுபட்ட தீர்ப்பளித்துள்ளது. அதேநேரத்தில், அலகாபாத் உயர் நீதிமன்றம் 2006ல் பிறப்பித்த உத்தரவு செல்லுமா என்பதை புதிய அமர்வு விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில், முகமதன் ஆங்கிலோ ஓரியன்டல் கல்லுாரி 1875ல் துவங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தின் போது, 1920ல் இது பல்கலையாக தரம் உயர்த்தப்பட்டு அலிகார் முஸ்லிம் பல்கலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு கல்வி நிறுவனங்களை நிறுவவும், நிர்வகிக்கவும் அரசியலமைப்பின் 30வது பிரிவு- அதிகாரம் அளிக்கிறது. இதன் அடிப்படையில், அலிகார் முஸ்லிம் பல்கலை சிறுபான்மை அந்தஸ்தை பெற்றது.
2006ல் உத்தரவு
கடந்த 1951ல் செய்யப்பட்ட சட்ட திருத்தத்தை தொடர்ந்து, சிறுபான்மை அந்தஸ்தை அலிகார் முஸ்லிம் பல்கலை இழந்தது. பின், 1981ல் இரண்டாவது முறையாக செய்யப்பட்ட சட்ட திருத்தத்தின் போது, இழந்த அந்தஸ்தை மீண்டும் பெற்றது.
கடந்த 1967ல் அஜீஸ் பாஷா மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடந்த வழக்கில், அலிகார் முஸ்லிம் பல்கலை மத்திய அரசு நிதியை பெறுவதால், அது சிறுபான்மை அந்தஸ்தை பெற முடியாது என, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு உத்தரவிட்டது.
இது தொடர்பான மற்றொரு வழக்கில், 1981ல் திருத்தப்பட்ட சட்டத்தை ரத்து செய்த அலகாபாத் உயர் நீதிமன்றம், அலிகார் முஸ்லிம் பல்கலையை சிறுபான்மை கல்வி நிறுவனமாக கருத முடியாது என, 2006ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பல்கலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு, ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வுக்கு 2019 பிப்., 12ல் மாற்றப்பட்டது.
கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
நீதிபதிகள் சந்திரசூட், சஞ்சீவ் கன்னா, பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் ஒரு தீர்ப்பையும், நீதிபதிகள் சூர்யகாந்த், திபங்கர் தத்தா, சதீஷ் சந்திர சர்மா மாறுபட்ட தீர்ப்பையும் அளித்துள்ளனர்.
தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விபரம்:
அலிகார் முஸ்லிம் பல்கலையை சிறுபான்மை கல்வி நிறுவனமாக கருத முடியாது என, உச்ச நீதிமன்றத்தின் அரசியல்சாசன அமர்வு 1967ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறோம்.
அலிகார் பல்கலை, சிறுபான்மை கல்வி நிறுவனமா என்பது குறித்து அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.
விசாரணை தொடரும்
அலகாபாத் உயர் நீதிமன்றம், 2006ல் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டை தீர்ப்பதற்கும், சிறுபான்மை அந்துஸ்து தொடர்பான பிரச்னையை தீர்ப்பதற்கும் தலைமை நீதிபதியின் அறிவுறுத்தல்களை பெற்று, வழக்கின் ஆவணங்களை வழக்கமான அமர்வின் முன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக அந்த அமர்வு விசாரணையை தொடரும்.
சிறுபான்மையினரின் நலனுக்காக மட்டுமே ஒரு கல்வி நிறுவனம் துவங்கப்பட வேண்டும் அல்லது அந்த சமூகத்தை சேர்ந்தவர்களால் மட்டுமே அது நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது அவசியமல்ல.
மதச்சார்பற்ற கல்வியை சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் வலியுறுத்த விரும்பலாம் இல்லையா?
சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களின் தன்மையை மீறாத வரையில், அரசு அவற்றை ஒழுங்குபடுத்த முடியும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ஏழு நீதிபதிகளில், 4:3 என்ற விகிதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.