ADDED : ஜன 25, 2024 01:09 AM
பெங்களூரு,கர்நாடகாவின் பெங்களூரில் காணாமல் போன சிறுவன், ஹைதராபாதில் கண்டுபிடிக்கப்பட்டார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஒயிட்பீல்டில் வசிக்கும் சுகேஷ் - நிவேதிதா தம்பதியின் மகன் பரிணவ், 12. இவர் குஞ்சூரின் டென் அகாடமி பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார்.
ஒயிட்பீல்டில் உள்ள ஒரு சென்டரில் டியூஷன் படிக்கிறார். தினமும் இவரை தந்தை, டியூஷன் சென்டருக்கு அழைத்துச் சென்று, அழைத்து வருவது வழக்கம்.
கடந்த 21ம் தேதி காலை, சுகேஷ், தன் மகன் பரிணவை டியூஷன் சென்டரில் விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்தார். மதியம் 12:15 மணியளவில், மகனை அழைத்து வரச் சென்றபோது, சென்டரில் அவர் இல்லை; சுற்றுப்பகுதியில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து, ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
டியூஷன் சென்டரில் இருந்து வெளியே வந்த பரிணவ், மாரத்தஹள்ளி வரை நடந்து சென்றதும், அங்கு பி.எம்.டி.சி., பஸ்சில் ஏறியதும் பதிவாகியிருந்தது.
சிறுவனை கண்டுபிடிக்க, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தொடர் விசாரணையில், சிறுவன் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருக்கும் தகவல் கிடைத்தது.
ரயிலில் ஹைதராபாதுக்கு சென்ற பரிணவ், நாம்பள்ளி மெட்ரோ ரயில் நிலையத்தில் நேற்று காலை தனியாக அங்கும், இங்கும் நடமாடினார். இதை கவனித்த போலீசார், விசாரித்தபோது பெங்களூரில் இருந்து வந்ததை கூறினார்.
இது குறித்து, ஹைதராபாத் போலீசார், ஒயிட்பீல்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர் எதற்காக அங்கு சென்றார் என்பது தெரியவில்லை. சிறுவனை அழைத்து வர, போலீசார் ஹைதராபாத் சென்றுள்ளனர்.