சத்தீஸ்கரில் மாயமான பத்திரிகையாளர் ஒப்பந்ததாரர் வீட்டில் சடலமாக மீட்பு
சத்தீஸ்கரில் மாயமான பத்திரிகையாளர் ஒப்பந்ததாரர் வீட்டில் சடலமாக மீட்பு
ADDED : ஜன 04, 2025 11:58 PM

ராய்பூர்: சத்தீஸ்கரில் புத்தாண்டு அன்று நள்ளிரவு மாயமான பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர், அரசு ஒப்பந்தாரர் வீட்டு 'செப்டிக் டேங்'கில் சடலமாக மீட்கப்பட்டார்.
சத்தீஸ்கரைச் சேர்ந்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திராகர், 33, பிரபல தனியார் ஆங்கில 'டிவி' சேனலில் 'ப்ரீலான்சராக' பணியாற்றி வந்தார்; சொந்தமாக யு டியூப் சேனலும் நடத்தி வந்தார்.
நக்சலைட்டுகள் அதிகமுள்ள பஸ்தார் மாவட்டத்தில் செய்தியாளராக அவர் பணியாற்றி வந்தார். இந்த சூழலில், புத்தாண்டு தினமான கடந்த 1ம் தேதி நள்ளிரவு, ஒப்பந்ததாரர் ஒருவர் அழைப்பை ஏற்று, வீட்டிலிருந்து கிளம்பினார்.
மொபைல் சிக்னல்
இது குறித்து சக ஊழியரான தன் நண்பரிடம் தெரிவித்துவிட்டு சென்றிருந்தார். அவர் வீடு திரும்பாததை அடுத்து, பல இடங்களில் உறவினர்கள் தேடினர்.
முகேஷ் கிடைக்காததை அடுத்து, போலீசில் புகாரளிக்கப்பட்டது. அவரது மொபைல் போன் சிக்னலை வைத்து விசாரணை நடத்திய தனிப்படை போலீசார், அது கடைசியாக, பீஜாப்பூர் நகரின் சாட்டன்பரா பஸ்தியில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திராகரின் வீட்டை காண்பித்தது.
அங்கு சோதனை நடத்திய போலீசாருக்கு, வீட்டின் செப்டிக் டேங்க் ஒன்று அவசர அவசரமாக மூடப்பட்டிருந்தது சந்தேகத்தை எழுப்பியது.
இதையடுத்து, செப்டிக் டேங் மூடி அகற்றப்பட்டது. உள்ளே, முகேஷின் உடல் கிடந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் தலை, முதுகு உட்பட பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததால், முகேஷ் கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.
இதையடுத்து, முகேஷ் உடல் கண்டெடுக்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் சுரேஷ் சந்திராகர் உட்பட பலரிடம், விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விவகாரத்தில் மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டனம்
அரசு ஒப்பந்ததாரர் சுரேஷ் மேற்கொண்ட சாலைப் பணியில் முறைகேடு நடந்தது தொடர்பாக சமீபத்தில் முகேஷ் செய்தி வெளியிட்டதால், அவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கொலை சம்பவத்துக்கு, முதல்வர் விஷ்ணு தியோ சாய் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முகேஷின் மறைவுக்கு, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உட்பட பல்வேறு பத்திரிகை சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

