8 ஆண்டுகளுக்கு முன் மாயமான விமான பாகங்கள் கண்டெடுப்பு
8 ஆண்டுகளுக்கு முன் மாயமான விமான பாகங்கள் கண்டெடுப்பு
ADDED : ஜன 13, 2024 01:41 AM
புதுடில்லி,எட்டு ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானத்தின் சிதைந்த பாகங்கள், தற்போது வங்கக்கடலில் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சென்னை அடுத்த தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 2016- ஜூலை 22ல், இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் புறப்பட்டது.
துண்டிக்கப்பட்டது
இதில், விமான ஊழியர்கள் ஆறு பேர், விமானப்படை வீரர்கள் 11 பேர், இரண்டு ராணுவ வீரர்கள், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த தலா ஒருவர், ஆயுதக்கிடங்கில் பணிபுரிந்த ஆந்திராவைச் சேர்ந்த எட்டு பேர் என மொத்தம் 29 பேர் அவ்விமானத்தில் பயணித்தனர்.
புறப்பட்ட 16 நிமிடங்களுக்குப்பின், வங்கக்கடல் பகுதியில் விமானம் பறந்தபோது, அதன் தொடர்பு ரேடார் கண்காணிப்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை சார்பில் நீண்டநாட்களாக தேடுதல் பணி நடைபெற்றது.
எனினும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப் பட்டது.
ஆய்வு புகைப்படம்
இந்நிலையில் மாயமான விமானத்தின் பாகங்கள் எட்டு ஆண்டுகளுக்குப்பின் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் வாயிலாக சமீபத்தில் அனுப்பப்பட்ட நீர்மூழ்கி வாகனம் பதிவு செய்த படங்களை ஆய்வு செய்ததில், சென்னை கடற்கரையில் இருந்து, 310 கி.மீ., தொலைவில் கடலுக்கு அடியில், 3.4 கி.மீ., ஆழத்தில் சில பாகங்கள் கண்டறியப்பட்டன.
அவை, மாயமான ஏ.என்.32 ரக விமானத்தின் பாகங்களுடன் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்தில் கிடைத்த இந்த ஆய்வு புகைப்படம், அதே பகுதியில் காணாமல் போன வேறு எந்த விமானத்தின் பதிவுகளையும் கொண்டிருக்கவில்லை.
எனவே, இந்த சிதைந்த பகுதிகள், விபத்துக்குள்ளான இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.-32 விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.