மாயமான சபரிமலை துவாரபாலகர் பீடம்; நன்கொடையாளர் உறவினர் வீட்டில் மீட்பு
மாயமான சபரிமலை துவாரபாலகர் பீடம்; நன்கொடையாளர் உறவினர் வீட்டில் மீட்பு
ADDED : செப் 30, 2025 03:40 AM

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், கருவறைக்கு முன் உள்ள இரு துவாரபாலகர் சிலைகளில் அமைக்கப்பட்டிருந்த தங்க பீடம் காணாமல் போன நிலையில், நன்கொடையாளரின் உறவினர் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது சபரிமலை அய்யப்பன் கோவில். இக்கோவிலின் கருவறைக்கு முன் உள்ள இரு துவாரபாலகர் சிலைகளுக்கு தங்க முலாம் பூசப்பட்ட செப்பு தகடுகள் அணிவிக்கப்பட்டிருந்தன.
எடை குறைந்தது சமீபத்தில் கோவிலின் சிறப்பு ஆணையரின் அனுமதி இல்லாமல், இந்த தங்க கவசங்களை தேவசம் போர்டு எடுத்துச் சென்று பழுது பார்த்ததாக புகார் எழுந்தது.
மேலும், அகற்றும்போது 42 கிலோவாக இருந்த தங்க கவசம், மீண்டும் பொருத்தும்போது 4 கிலோ எடை குறைந்து இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், கோவிலின் சிறப்பு கமிஷனரின் அனுமதியின்றி தங்க கவசத்தை அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்தது. மேலும், மாயமான தங்கம் குறித்த விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்தச் சூழலில், 2019ம் ஆண்டில், தான் வழங்கிய துவாரபாலகர்கள் தங்க பீடமும் காணாமல் போனதாக, நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் பொட்டி என்பவரும் புகார் எழுப்பினார். இதனால், துவாரபாலகர் தங்க கவசங்கள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, காணாமல் போனதாக கூறப்பட்ட தங்க பீடம் குறித்து எஸ்.பி., சுனில் குமார் தலைமையிலான தேவசம் போர்டு விஜிலன்ஸ் குழு விசாரணை நடத்தியது. அப்போது, திருவனந்தபுரத்தில் உள்ள நன்கொடையாளர் உன்னி கிருஷ்ணனின் உறவினர் வீட்டில் அந்த பீடம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதை பறிமுதல் செய்த எஸ்.பி., சுனில் குமார் அடங்கிய குழு, தேவசம் போர்டு வசம் ஒப்படைத்தது.
சந்தேகம் எழுந்தது
தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், ''தன் மேற்பார்வையில் தங்க பீடம் இருப்பது தெரிந்தும், நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் பொய் சொல்லி இருக்கிறார். கோவில் சார்பில் நடத்தப்பட்ட அய்யப்ப சங்கமம் நிகழ்ச்சியை தடுப்பதற்காக இந்த சதியில் அவர் ஈடுபட்டாரா என்ற சந்தேகம் எழுந்து இருக்கிறது,'' என்றார்.
இதற்கிடையே, பெங்களூரை சேர்ந்த நன்கொடையாளர் உன்னிகிருஷ்ணன் கூறுகையில், ''கோட்டயத்தில் உள்ள என் ஊழியர் வாசுதேவனிடம் தான் தங்க பீடம் இருந்திருக்கிறது. இது பற்றி எனக்கு தெரியாது,'' என்றார்.