ADDED : நவ 04, 2024 10:05 PM

மங்களூரு; ஒன்றரை மாதத்துக்கு முன்பு, காணாமல் போன பெண்ணின் எலும்புக்கூடு வனப்பகுதியில் துாக்கிட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தட்சிணகன்னடா மாவட்டம், மங்களூரின் உர்வா கிராமத்தில் வசிப்பவர் சஞ்சீவ், 30. இவருக்கு ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, நளினி, 25, என்பவருடன் திருமணம் நடந்தது.
நளினி அவ்வப்போது தாய் வீட்டுக்குச் சென்று வருவது வழக்கம்.
ஒன்றரை மாதத்துக்கு முன்பு, தன் தாய் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி சென்ற நளினி, மீண்டும் கணவரின் வீட்டுக்குத் திரும்பவில்லை.
தன் தாய் வீட்டுக்கும் இவர் செல்லவில்லை. பல இடங்களில் மனைவியை தேடிய சஞ்சீவ், அக்டோபர் 8ம் தேதி, சம்ப்யா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, நளினியை தேடி வந்தனர்.
இந்நிலையில் சஞ்சீவ் வீட்டின் எதிரே உள்ள வனப்பகுதியில், குன்றின் உச்சியில் மரத்தில் துாக்கிட்ட நிலையில், நளினியின் சடலம் எலும்புக்கூடாக நேற்று காலை கண்டுபிடிக்கப்பட்டது. அது நளினி என்பதை, அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.
தாய் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி சென்ற இவர், வனப்பகுதிக்கு ஏன் வந்தார் என்பது சந்தேகத்தை எழுப்பியது.
அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை.
எலும்புக்கூட்டை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். விசாரணைக்கு பின், நளினி இறப்பு பற்றிய முழுமையான விபரங்கள் தெரியும் என, போலீசார் கூறியுள்ளனர்.
இளம்பெண் எலும்பு கூடாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், கிராமத்தினரிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.