ADDED : டிச 23, 2024 04:35 AM

சம்பல்: உத்தர பிரதேச மாநிலம் சம்பலில், 46 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சிவன் - ஹனுமன் கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, காணாமல் போன புதையுண்ட படிக்கிணறு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள சம்பலில் சமீபத்தில் ஒரு மசூதி தொடர்பான சர்ச்சை எழுந்தது. ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு, அங்கு மசூதி கட்டப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தொல்லியல் துறையினர் சென்றபோது, மாற்று மதத்தினர் வன்முறையில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
இந்நிலையில், சம்பலில் இந்த மசூதிக்கு அருகில் அமைந்துள்ள, 46 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த, சிவன் - ஹனுமன் கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
பிரமாண்ட படிக்கிணறு
வன்முறை காரணமாக மூடப்பட்ட அந்தக் கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவிலை முழுமையாக மீட்கும் முயற்சி நடந்து வருகிறது. கோவில் திறக்கப்பட்டு, பூஜைகளும் நடந்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், சம்பல் மாவட்டம் சந்தாசி பகுதியில் பூமிக்கு அடியில் ஒரு கட்டுமான அமைப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து, தொல்லியல் துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன், மேலே இருந்த மண் அகற்றப்பட்டபோது, பூமிக்கு அடியில், பிரமாண்டமான ஒரு படிக்கிணறு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தப் படிக்கிணறு, 4,300 அடி பரப்புள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக, 2,300 அடி பரப்பு பகுதிகளில் மண் அகற்றப்பட்டு, பூமிக்கு அடியில் உள்ள படிக்கிணறை மீட்கும் முயற்சிகள் நடக்கின்றன.மழைநீரை சேகரிக்கும் வகையில், இதுபோன்ற படிக்கிணறுகள் கட்டப்படுகின்றன.
முதற்கட்ட ஆய்வு
இது, நிலத்தடி நீரை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த படிக்கிணறு, 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டிருக்கலாம் என, முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது நான்கு நிலைகளை கொண்டதாக உள்ளது. கீழே உள்ள இரண்டு நிலைகள் பளிங்கு கற்களாலும், மேலே உள்ள இரண்டு நிலைகள் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன.
இந்தப் படிக்கிணறு இருப்பது தெரியவந்ததும், அதை சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையே, சம்பலில் கல்கி விஷ்ணு கோவிலில் தொல்லியல் துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இந்தப் பகுதியில், ஏற்கனவே ஐந்து கோவில்கள் மற்றும் 19 கிணறுகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

