குழந்தைகளுடன் காணாமல் போன பெண் கோலாரில் கண்டுபிடிப்பு
குழந்தைகளுடன் காணாமல் போன பெண் கோலாரில் கண்டுபிடிப்பு
ADDED : பிப் 03, 2024 11:00 PM
கோலார்: கட்டுமானப் பணிக்கு வந்த நபருடன், மாயமான பெண், கோலாரில் கண்டுபிடிக்கப்பட்டார்.
துமகூரு குனிகல்லின், ஹோசூர் கிராமத்தில் கணவருடன் வசித்தவர் வசந்தகுமாரி, 28. தம்பதிக்கு தனுஸ்ரீ, 6, பூமிகா, 6, யோகிதா, 4, என்ற மூன்று பெண் குழந்தைகள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கணவர் இறந்துவிட்டார். அதன்பின் மாமியார் மற்றும் குழந்தைகளுடன் வசந்தகுமாரி வசித்து வந்தார்.
கடந்த மாதம் 18ல், இவர் குழந்தைகளுடன் மாயமானார். மன அழுத்தத்தால் அவர் எங்கோ சென்றிருக்கலாம் என, கருதப்பட்டது. பல இடங்களில் தேடிய மாமியார், குனிகல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தியபோது, தன் குழந்தைகளுடன், கோலாரின், சீனிவாசபுராவில் வசந்தகுமாரி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
வசந்தகுமாரியின் கணவர் குடும்பம் வசதியானது. எட்டு ஏக்கர் நிலம் உள்ளது. ஹோசூர் கிராமத்தில் புதிதாக வீடு கட்டுகின்றனர். கட்டடப் பணிக்காக, சித்தேஷ், 28, வந்திருந்தார்.
பணிக்கு சேர்ந்த மூன்றே நாட்களில், இவருக்கும், வசந்தகுமாரிக்கும் தொடர்பு ஏற்பட்டது. சித்தேஷுடன் வாழும் நோக்கில், மூன்று குழந்தைகளுடன் வசந்தகுமாரி ஓடியுள்ளார்.
இதை கண்டுபிடித்த குனிகல் போலீசார், நேற்று முன் தினம் மாலை வசந்தகுமாரையும், குழந்தைகளையும் அழைத்து வந்தனர். அவரது குடும்பத்தினரையும் வரவழைத்தனர்.
ஆனால் அவர் குடும்பத்தினருடன் செல்ல விரும்பவில்லை. காதலனுடன் செல்வதாக பிடிவாதம் பிடித்தார். எவ்வளவு புத்திமதி கூறியும் கேட்கவில்லை.
அதன்பின் இரண்டு குழந்தைகளை, மாமியாரிடம் விட்டு விட்டு, ஒரு குழந்தையை மட்டும் தான் வளர்ப்பதாகக்கூறி, சித்தேஷுடன் சென்றுவிட்டார்.