துணை முதல்வர் சிவகுமாருடன் ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் சந்திப்பு
துணை முதல்வர் சிவகுமாருடன் ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் சந்திப்பு
ADDED : ஜன 29, 2024 07:19 AM
பெங்களூரு: முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகனும், ம.ஜ.த., - எம்.எல்.சி.,யுமான சூரஜ் ரேவண்ணா, துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பெங்களூரின், சதாசிவநகரில் உள்ள துணை முதல்வர் சிவகுமாரின் இல்லத்தில், ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா, நேற்று முன் தினம் சந்தித்தார். இருவரும் அரை மணி நேரம், ரகசிய பேச்சு நடத்தியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
சிவகுமாரும், சூரஜ் கவுடாவும் சந்தித்த போட்டோ மட்டும், ஊடகங்களில் வெளியானது. ஆனால் இருவரும் என்ன பேசினர் என்பது தெரியவில்லை.
ஹாசன் லோக்சபா தொகுதிக்கு, பிரஜ்வல் ரேவண்ணாவே வேட்பாளர் என, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா, ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளார். குழப்பத்துக்கு வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சி கூட்டம் நடத்தி தேர்தலுக்கும் தயாராகிறார்.
இந்நிலையில் துணை முதல்வர் சிவகுமாரை, ம.ஜ.த., - எம்.எல்.சி., சூரஜ் ரேவண்ணா சந்தித்து பேசியதன் நோக்கம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சூரஜ் கூறுகையில், ''துணை முதல்வரை சந்தித்தது, மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அரசியல் குறித்து பேசவில்லை. தொகுதி பிரச்னைகள் குறித்து ஆலோசித்தோம்,'' என்றார்.
முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகன் சூரஜ் ரேவண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.