தொலைபேசியை ஒட்டு கேட்கிறது காங்., அரசு மீது ம.ஜ.த., குற்றச்சாட்டு
தொலைபேசியை ஒட்டு கேட்கிறது காங்., அரசு மீது ம.ஜ.த., குற்றச்சாட்டு
ADDED : அக் 05, 2024 05:02 AM

பெங்களூரு: “மத்திய கனரக தொழிற்துறை அமைச்சர் குமாரசாமி மீது புகார் பதிவு செய்ய முதல்வர் அலுவலகம் நெருக்கடி கொடுக்கிறது. என் தொலைபேசி உரையாடலை மாநில அரசு ஒட்டுக் கேட்கிறது,” என, பெங்களூரு பிரிவு ம.ஜ.த., தலைவர் ரமேஷ் கவுடா குற்றம்சாட்டினார்.
பெங்களூரு, சேஷாத்ரிபுரம் ம.ஜ.த., அலுவலகத்தில் நேற்று, அவர் அளித்த பேட்டி:
மாநிலத்தின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டிய உள் கட்டமைப்பு பாதுகாப்புப் பிரிவு, என் தொலைபேசியை ஒட்டுக் கேட்கிறது.
குமாரசாமி மீது குற்றஞ்சாட்டிய விஜய் டாடா, பலருக்கு மோசடி செய்துள்ளார். அவர் மீது நாட்டின் பல பகுதிகளில் நுாற்றுக்கணக்கான வழக்குகள் உள்ளன. மோசடி செய்வதே அவரது தொழில். இதுகுறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரிக்க வேண்டும்.
மத்திய அமைச்சர் குமாரசாமி மீதும், என் மீதும், விஜய் டாடா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின் அவர் மீது, நாங்கள் புகார் அளிக்க சென்றபோது, விஜய் டாடா அங்கிருந்தார். அவரிடம் நாங்கள், இன்ஸ்பெக்டர் முன்னிலையில், 'எங்கள் மீது எதற்காக, பொய்யான புகார் அளித்தாய்?' என கேட்டோம்.
அப்போது குமார சாமி மீது புகார் அளிக்கும்படி, முதல்வர் அலுவலகமும், அமைச்சரும் நெருக்கடி கொடுப்பதாக விஜய் டாடா கூறினார்.
விஜய் டாடா மீது, கர்நாடகா மட்டுமின்றி, நாக்பூர், புனே, மும்பையில் வழக்குகள் பதிவாகியுள்ளன. 'தேவனஹள்ளி அருகில் அபார்ட்மென்ட் கட்டுகிறேன்.
இங்கு பிளாட் வாங்குவோருக்கு ஒரு பென்ஸ் கார் பரிசளிக்கப்படும்' என விளம்பரம் செய்தார். ஒரு இடத்தை மூவருக்கு விற்று மோசடி செய்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.