ADDED : ஜன 17, 2025 11:07 PM
பெங்களூரு: 'திறமையில்லாத உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்' என, ம.ஜ.த., வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் நேற்று ம.ஜ.த., கூறியிருப்பதாவது:
பீதரில் நேற்று (முன் தினம்) பட்டப்பகலில், ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் நிரப்பும் வாகன ஊழியர்கள் இருவரை, துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து, பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த சம்பவத்தை மறக்கும் முன்பே, இன்று (நேற்று) தட்சிண கன்னடாவின் உல்லாளின் கோடிகார் வங்கிக் கிளையில், மர்ம கும்பல் கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளை அடித்துச் சென்றுள்ளது.
காங்கிரஸ் அரசு 60 சதவீதம் கமிஷன் கணக்கில், மாநிலத்தை கொள்ளை அடிக்கிறது. மற்றொரு பக்கம் கொள்ளை கும்பல் அட்டகாசம் செய்கிறது. காங்கிரசின் மோசமான ஆட்சியில், குற்றவாளிகளுக்கு சட்டத்தை பற்றியும், போலீசார் மீதும் பயம் இல்லை.
பட்டப்பகலில் ஏ.டி.எம்., வாகன ஊழியர்களை சுட்டுக் கொன்று, கொள்ளை அடித்தனர். உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், இவர்களை அப்பாவி என்று கூறுவாரா அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர் என, சொல்வாரா?
பரமேஸ்வர், திறமையில்லாத உள்துறை அமைச்சர். காங்கிரஸ் அரசுக்கு மானம், மரியாதை இருந்தால், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.