சித்ரதுர்காவில் பலத்தை காட்ட ம.ஜ.த., தலைவர்கள் முடிவு
சித்ரதுர்காவில் பலத்தை காட்ட ம.ஜ.த., தலைவர்கள் முடிவு
ADDED : பிப் 24, 2024 05:29 AM
சித்ரதுர்கா : லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ., - ம.ஜ.த., கட்சிகள், தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்து வரும் வேளையில், சித்ரதுர்காவில் கட்சியின் பலத்தை அதிகரிக்க ம.ஜ.த., தயாராகி வருகிறது.
சித்ரதுர்கா மாவட்டத்தின் மொளகால்மூரு, செல்லகெரே, சித்ரதுர்கா, ஹிரியூர், ஹொசதுர்கா, ஹொலல்கெரே ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளும், துமகூரு மாவட்டத்தின் சிரா, பாவகடா ஆகிய இரண்டு தொகுதிகளும் அடங்கி உள்ளன.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், இந்த எட்டு தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் காங்கிரசும், ஒரு தொகுதியில் பா.ஜ.,வும் வெற்றி பெற்றுள்ளன.
இவற்றில், பாவகடா, ஷிரா, ஹிரியூர், செல்லகெரே ஆகிய சட்டசபை தொகுதிகளில் ம.ஜ.த.,வுக்கு செல்வாக்கு உள்ளதை தலைவர்கள், தொண்டர்கள் உணர்ந்து உள்ளனர்.
பாவகடா முன்னாள் எம்.எல்.ஏ., திம்மராயப்பாவுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தலுக்கான ஏற்பாடுகள் துவங்குவதற்கு முன்பு, கட்சி தலைவர்கள் கூட்டத்தை நடத்தினார்.
இதில் 'அட்ஜெஸ்ட்மென்ட்' பார்முலாவுக்கு அடிபணியாமல் நடந்து கொள்ள வேண்டும். தேர்தலுக்கு கட்சி அமைப்பு, தொண்டர்களை திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது.