போதை பொருளை கட்டுப்படுத்த ம.ஜ.த., உறுப்பினர் வலியுறுத்தல்
போதை பொருளை கட்டுப்படுத்த ம.ஜ.த., உறுப்பினர் வலியுறுத்தல்
ADDED : மார் 21, 2025 03:50 AM

பெங்களூரு | ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர் சுரேஷ் பாபு, அரசுக்கு ஏராளமான ஆலோசனைகள் கூறினார்.
சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில், நேற்று அவர் பேசியதாவது:
முதல்வர் தாக்கல் செய்த பட்ஜெட்டில், 1.10 லட்சம் கோடி ரூபாய் கடன் பெறுவது குறித்து அறிவித்துள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் பெறும் வாய்ப்புள்ளது.
கொரோனாவுக்கு பின், இளைஞர்கள் விவசாயத்தில் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே விவசாயத்துக்கு அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாநில அரசு 'யுவநிதி' திட்டத்தை அறிவித்துள்ளது.
இதில் 1.74 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். மாநிலத்தில் வெவ்வேறு கோர்ஸ்களை முடித்து, 8 லட்சம் பட்டதாரிகள் வெளியே வருகின்றனர். வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது.
இளைஞர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதில், அக்கறை காட்ட வேண்டும். மழை நீர் சேமிப்பு, சொட்டு நீர்ப்பாசனம், சோலார் மின் உற்பத்திக்கு, முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நீரை சிக்கனமாக பயன்படுத்தும் நடைமுறையை பயன்படுத்த வேண்டும்.
விவசாய உற்பத்தி பொருட்களுக்கு, முன்னுரிமை தர வேண்டும். குளிர்பதன மையங்கள் அமைக்க வேண்டும். தொற்று நோய்களால் கால்நடைகள் பாதிப்படைந்துள்ளன. இவைகளுக்கு சிகிச்சை வசதி செய்ய வேண்டும். கால்நடை சிகிச்சை மையங்களில், டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.
மாநிலத்தில் போதைப்பொருள் பிரச்னை அதிகம் உள்ளது. இதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுங்கள். ஆன்லைன் விளையாட்டுகளால், இளம் சமுதாயத்தினர் பாழாகின்றனர். அதை கட்டுப்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.

