ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., 'தடாலடி'
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு ம.ஜ.த., - எம்.எல்.ஏ., 'தடாலடி'
ADDED : பிப் 26, 2024 07:23 AM

யாத்கிர்: ''முதல்வர் சித்தராமையா கேட்டு கொண்டால், ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசை ஆதரிப்பது பற்றி யோசிப்பேன்,'' என்று, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர் கூறி உள்ளார்.
யாத்கிர் குர்மித்கல் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சரணகவுடா கந்தகூர். பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால், ம.ஜ.த., தலைமை மீது அதிருப்தியில் உள்ளார்.
கட்சி தொடர்பான கூட்டங்களிலும் கலந்து கொள்வது இல்லை. ராஜ்யசபா தேர்தலில் சரணகவுடா கந்தகூர், காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டு போட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து குர்மித்கல்லில் நேற்று அவர் அளித்த பேட்டி:
என் தந்தை நாகனகவுடா கந்தகூர், வடமாவட்டங்களில் ம.ஜ.த., கட்சியை கட்டமைக்க, கடுமையாக உழைத்தவர். கடந்த மாதம், அவர் மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்கில், குமாரசாமி பங்கேற்கவில்லை.
இதனால் எனக்கு அவர் மீது, எந்த கோபமும் இல்லை; ஆனால் வருத்தம் உள்ளது. சரணகவுடா ம.ஜ.த.,வுக்கு வேண்டாம் என்று அவர் நினைத்து விட்டார் என்று தோன்றுகிறது.
என் தந்தை முன்னாள் எம்.எல்.ஏ.,வாக இருந்தாலும், அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் கவுரவமாக நடந்தது. முதல்வர் சித்தராமையா என்னிடம் மொபைல் போனில் பேசி, ஆறுதல் தெரிவித்தார்.
யாத்கிர் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், இறுதிச்சடங்கை முன்நின்று நடத்தி கொடுத்தனர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் இப்போது முதல்வர்சித்தராமையா பக்கம் நிற்கிறேன்.
காங்கிரசுக்கு செல்வேனா என்று தெரியாது. என் தந்தை உயிருடன் இருந்திருந்ததால், அவரிடம் கலந்து பேசி முடிவு எடுத்து இருப்பேன். ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசின் மூன்று வேட்பாளர்களுக்கும், வெற்றி பெறுவதற்கு, தேவையான எம்.எல்.ஏ.,க்கள் பலம் இருப்பதாக நினைக்கிறேன்.
ஒருவேளை என் ஆதரவும் தேவை என்று, முதல்வர் சித்தராமையா என்னிடம் கேட்டு கொண்டால், காங்கிரசை ஆதரிப்பது பற்றி யோசிப்பேன். எனது ஆதரவாளர்கள், குடும்பத்தினரிடம் பேசி முடிவு எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

