ஹாசனில் மீண்டும் வெற்றி பெறுவேன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் நம்பிக்கை
ஹாசனில் மீண்டும் வெற்றி பெறுவேன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் நம்பிக்கை
ADDED : பிப் 17, 2024 11:32 PM

ஹாசன் : ''மத்திய அரசிடம் இருந்து 12,500 கோடி ரூபாய் நிதி கொண்டு வந்து, கடந்த 5 ஆண்டுகளில், பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். இது குறித்து, விரைவில் சாதனை புத்தகம் வெளியிடப்படும்,'' என ஹாசன் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா தெரிவித்தார்.
ஹாசன் லோக்சபா எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனான இவர் மட்டுமே, 2019 லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற ம.ஜ.த.,வின் ஒரே ஒரு லோக்சபா எம்.பி.,யாவார்.
இம்முறை மீண்டும் போட்டியிடுவதற்காக, தொகுதியின் பல்வேறு இடங்களுக்கு சென்று, வாக்காளர்களை சந்தித்து வருகிறார். முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கு சென்று, ஆதரவு திரட்டுகிறார்.
இது குறித்து, ஹாசனில் பிரஜ்வல் நேற்று கூறியதாவது:
நான் பிரசாரத்துக்கு சென்ற இடமெல்லாம், நல்ல வரவேற்பு கிடைக்கிறது. நீங்கள் மீண்டும் வெற்றி பெறுவீர் என்று ஆசிர்வாதம் செய்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில், மத்திய அரசிடம் இருந்து 12,500 கோடி ரூபாய் நிதி கொண்டு வந்து, பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன்.
பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா உட்பட பலரும் ஒத்துழைப்பு தந்தனர். அவர்களின் ஆசிர்வாதம் பெற்று, தொடர்ந்து பணியாற்றுவேன்.
மீண்டும் பிரஜ்வலுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மக்கள் பேசிகொள்கின்றனர். கடவுள் ஆசிர்வாதம், மக்கள் ஆசிர்வாதம் இருந்தால், மீண்டும் வெற்றி பெறுவேன். பா.ஜ., கூட்டணியால், ம.ஜ.த.,வுக்கு 100க்கு 100 சதவீதம் அனுகூலமாக இருக்கும்.
பா.ஜ., பிரமுகர்கள் பலரும் என்னுடன் நல்ல தொடர்பில் உள்ளனர். இரு கட்சி பிரமுகர்களும், தொண்டர்களும் இணைந்து, தேர்தல் பணியாற்றுவோம். மக்கள் காங்கிரசை நிராகரிக்க வேண்டும்.
மோடிக்கு மீண்டும் பலம் சேர்க்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்காக அவர் பாடுபட்டு வருகிறார். ஐந்து ஆண்டுகளாக நான் செய்துள்ள வளர்ச்சி பணிகள் குறித்து, விரைவில் சாதனை புத்தகம் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.