சிக்கபல்லாபூர் வேட்பாளர் தேர்வில் ம.ஜ.த.,வின் 'கை' ஓங்க வாய்ப்பு
சிக்கபல்லாபூர் வேட்பாளர் தேர்வில் ம.ஜ.த.,வின் 'கை' ஓங்க வாய்ப்பு
ADDED : பிப் 24, 2024 04:20 AM
சிக்கபல்லாபூர் : சிக்கபல்லாபூரில் பா.ஜ.,வை விட, ம.ஜ.த.,வுக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால், வேட்பாளர் தேர்வில் ம.ஜ.த.,வின் கை ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் பா.ஜ., - கூட்டணி அமைத்திருந்தாலும், சிக்கபல்லாபூரில், பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் சுதாகர், எம்.எல்.ஏ., விஸ்வநாத் தனது மகன் அலோக்கிற்கு சீட் கேட்டு வருகிறார்.
டில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த, ம.ஜ.த., மாநில தலைவர் குமாரசாமி, இளைஞர் அணி தலைவர் நிகில் குமாரசாமி ஆகியோர், சிக்கபல்லாபூர் தொகுதி குறித்தும் பேசியதாக தெரிகிறது.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் சுதாகர், ம.ஜ.த., மாநில தலைவர் சுதாகரை இரண்டு முறையும், நிகில் குமாரசாமியை நான்கு முறையும் சந்தித்து பேச்சு நடத்தி உள்ளார்.
இதுபோன்று விஸ்வநாத்தும், ம.ஜ.த., தலைவர்களுடன் தொடர்பில் இருக்கிறார். ம.ஜ.த.,வுக்கு இவ்வளவு செல்வாக்கு உள்ளதா என்பது அக்கட்சியினருக்கே ஆச்சரியமாக உள்ளது.
இத்தொகுதியில் ம.ஜ.த.,வில் சீட் கேட்பவர்கள் யாரும் இல்லையா என்றால் 'இல்லை' என்றே கூறலாம். அதேவேளையில், இத்தொகுதியில் பா.ஜ.,வை விட, ம.ஜ.த.,விற்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. எனவே, பா.ஜ., தன்னிச்சையாக வேட்பாளரை தேர்வு செய்ய முடியாத நிலை உள்ளது.
இத்தொகுதி பா.ஜ.,வுக்கு கிடைத்தாலும், வேட்பாளர் தேர்வில், ம.ஜ.த., தனது அதிகாரத்தை காட்ட வாய்ப்பு உள்ளது.
ம.ஜ.த., தனக்கு விருப்பமான தலைவர்களை வேட்பாளர்கள் ஆக்க, பா.ஜ., மீது செல்வாக்கு செலுத்தும் வாய்ப்பு உள்ளது.
இங்கு ஒக்கலிகர் சமுதாயத்துக்கு 7 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதி பொறுப்பாளராக பட்டியல் சமூகத்தை சேர்ந்த நிசர்கா நாராயணசாமியை ம.ஜ.த., நியமித்து உள்ளது.
மாவட்ட ம.ஜ.த., தலைவர் முனகவுடா கூறியதாவது:
வரும் நாட்களில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி விவகாரத்தில் நல்ல சூழல் நிலவும். ஆனால் தலைவர்களை விட, வாக்காளர்களை எப்படி மாற்றுவது என்பது தான் நம் முன் உள்ள பிரச்னை. இரு கட்சியினரும் உள்ளூரில் பிடிவாத அரசியல் செய்து வருகின்றனர். கூட்டணி நாட்டுக்கு நல்லது. ஆனால், எங்களுக்கு மூன்று அல்லது ஆறு தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
துமகூரு, சிக்கபல்லாபூர், பெங்களூரு ரூரல் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
சிக்கபல்லாபூர் மக்களவை தொகுதியில் இரு கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் வேட்பாளரை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.