ADDED : அக் 12, 2024 07:10 AM

பெலகாவி : “விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை,” என, காங்கிரஸ் அரசு மீது, அக்கட்சி எம்.எல்.ஏ., ராஜு காகே கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பெலகாவி காக்வாட்டில் நேற்று அவர் அளித்த பேட்டி: காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின், விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. விவசாயம் சார்ந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை. நிலைமை இப்படியே சென்றால், விவசாயிகள் வாழ்க்கை நடத்துவது கடினம்.
விவசாயிகள் பயிர்சாகுபடி செய்வதை நிறுத்தினால் என்ன செய்ய முடியும்? தங்கம், வெள்ளி, பணத்தையா சாப்பிட முடியும்? விவசாயிகள் வாழ்ந்தால்தான் நாடு முன்னேற முடியும். நான் சொல்வதை அரசு கேட்கவில்லை. இதே நிலை நீடித்தால் விதான் சவுதாவில் தற்கொலை செய்வேன் என்று, ஒரு அமைச்சரிடம் நான் கூறினேன்.
விதான் சவுதாவுக்கு போய் ஒன்றும் செய்ய முடியாமல் வேடிக்கை பார்க்கிறோம். தேவைப்பட்டால் நாளையே எனது எம்.எல்.ஏ., பதவியை, ராஜினாமா செய்வேன். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்தும், எனக்கு அரசிடம் இருந்து ஆதரவு இல்லை.
அரசின் நடவடிக்கையால், நான் வேதனை அடைந்துள்ளேன். அடுத்த முறை தேர்தலில் போட்டியிடும் ஆசையே போய்விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

