மேடையிலிருந்து விழுந்து காயமடைந்த எம்.எல்.ஏ.,வுக்கு தொடர் சிகிச்சை
மேடையிலிருந்து விழுந்து காயமடைந்த எம்.எல்.ஏ.,வுக்கு தொடர் சிகிச்சை
ADDED : ஜன 01, 2025 02:25 AM

கொச்சி, கேரளாவில் நடன நிகழ்ச்சி நடந்த மேடையில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., உமா தாமசின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், அவருக்கு செயற்கை சுவாசம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு விருந்தினர்
கேரளாவின் கொச்சி நகரில் உள்ள ஜவஹர்லால் நேரு அரங்கத்தில், கின்னஸ் உலக சாதனைக்காக பரத நாட்டிய நிகழ்ச்சி கடந்த 29ம் தேதி நடந்தது. இதில், 12,000க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் நடனமாட இருந்தனர். இந்நிகழ்ச்சியில், திருக்காட்கரை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., உமா தாமஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
வி.ஐ.பி.,க்களுக்காக, 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மேடையில் அவர் அமர்ந்திருந்தார்.
அப்போது, அரங்கில் அமர்ந்த தன் ஆதரவாளர்களை நோக்கி கையசைப்பதற்காக உமா தாமஸ் எழுந்தபோது, எதிர்பாராதவிதமாக மேடையில் இருந்து தவறி விழுந்தார்.
முன்னேற்றம்
இதில், அவரது தலை, முதுகெலும்பு உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட உமா தாமசை டாக்டர்கள் பரிசோதித்ததில், அவரது மூளை, நுரையீரலில் ரத்த உறைவு ஏற்பட்டதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உமா தாமஸ் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 'உமா தாமசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
'தற்போது, உமா தாமஸ் கண்களை திறந்து, டாக்டர்களின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

