பாலியல் வழக்கில் எம்.எல்.ஏ., முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு
பாலியல் வழக்கில் எம்.எல்.ஏ., முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு
ADDED : செப் 25, 2024 12:59 AM

கொச்சி,
கேரள திரைத்துறையில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியது.
விசாரணை குழு
பல்வேறு முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தை சிறப்பு விசாரணை குழு விசாரித்து வருகிறது.
இந்த வகையில், நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூ., - எம்.எல்.ஏ.,வுமான முகேஷ் மீது, கொச்சியின் மாராடுவைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
திருச்சூரின் வடக்கன்சேரியைச் சேர்ந்த பெண்ணும் முகேஷ் மீது பாலியல் புகார் அளித்தார். இதை தொடர்ந்து, முகேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், கொச்சியில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் எம்.எல்.ஏ., முகேஷ் நேற்று காலை ஆஜரானார். அவரிடம் சிறப்பு விசாரணைக் குழு போலீசார் விசாரணை நடத்தினர்.
பின் முகேஷ் கைது செய்யப்பட்டார். அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின், நெஞ்சு வலிப்பதாக அவர் கூறியதை அடுத்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
நடிகர் சித்திக் கைது?
இதற்கிடையே, மலையாள நடிகர் சித்திக்கிற்கு எதிராக நடிகை ஒருவர் பாலியல் பலாத்கார புகார் அளித்திருந்தார்.
தமிழ் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், அதற்கு இணங்க மறுத்ததை அடுத்து பாலில் பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் தெரிவித்துஉள்ளார்.
இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு நடிகர் சித்திக் தாக்கல் செய்த மனுவை, நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
அவரை கைது செய்ய வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, போலீசார் சித்திக்கை தேடி வருகின்றனர்.