எம்.எல்.ஏ., விலை 50 கோடி ரூபாய்; கேரளா அரசியலில் பரபரப்பு!
எம்.எல்.ஏ., விலை 50 கோடி ரூபாய்; கேரளா அரசியலில் பரபரப்பு!
UPDATED : அக் 26, 2024 10:17 AM
ADDED : அக் 26, 2024 09:52 AM

திருவனந்தபுரம்: இடது முன்னணி அரசை ஆதரிக்கும் இரு எம்.எல்.ஏ.,க்களுக்கு தலா 50 கோடி ரூபாய் விலை பேசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சில உதிரி கட்சிகள், மார்க்சிஸ்ட் ஆதரவு சுயேச்சைகள் இடம் பெற்றுள்ளனர்.
இடது முன்னணி அரசை ஆதரிக்கும் ஆர்.எஸ்.பி.,(எல்) கட்சி எம்.எல்.ஏ., கோவூர் குஞ்சுமோன், ஜனாதிபத்ய கேரளா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஆண்டனி ராஜு ஆகிய இருவருக்கும் தலா 50 கோடி ரூபாய் லஞ்சம் தர, இடது முன்னணியில் இருக்கும் இன்னொரு எம்.எல்.ஏ., தாமஸ் முன் வந்தார் என்பது குற்றச்சாட்டு.
தற்போது தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணியில் இருக்கும் தாமஸ், அஜித் பவார் அணியில் எம்.எல்.ஏ.,க்களை சேர்ப்பதற்காக லஞ்சம் தர முன்வந்தார் என்பது குற்றச்சாட்டு.எம்.எல்.ஏ., ஆண்டனி ராஜூ இந்த குற்றச்சாட்டை கூறினார். தகவல் அறிந்த முதல்வர் பினராய் விஜயன், குற்றச்சாட்டுக்கு ஆளான தாமஸிடம் நேரடியாக விசாரித்தார். தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த தாமஸ், தனக்கு இடது முன்னணி அரசியல் அமைச்சர் பதவி கிடைப்பதை தடுக்கவே, இத்தகைய குற்றச்சாட்டை கிளப்பி இருப்பதாக கூறியுள்ளார்.
50 கோடி ரூபாய் விலை பேசப்பட்ட எம்.எல்.ஏ.,க்களில் ஒருவரான குஞ்சுமோன், அதை மறுத்துள்ளார்; எம்.எல்.ஏ., ஆண்டனி ராஜு தாம் கூறிய குற்றச்சாட்டில் உறுதியாக இருக்கிறார்.இது பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ.,க்கள் மூன்று பேரும் அரசை வலியுறுத்தியுள்ளனர். கேரளா அரசியலில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.