மேடையில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த எம்.எல்.ஏ.,வுக்கு சிகிச்சை
மேடையில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த எம்.எல்.ஏ.,வுக்கு சிகிச்சை
ADDED : டிச 31, 2024 06:09 AM

எர்ணாகுளம் : கேரளாவில் நடன நிகழ்ச்சியின் போது மேடையில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த காங்., - எம்.எல்.ஏ., உமா தாசுக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில், பரதநாட்டிய நடன நிகழ்ச்சியின் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
இதில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில், திருக்காக்கரை தொகுதி காங்., - எம்.எல்.ஏ., உமா தாஸ், 59, பங்கேற்றார்.
வி.ஐ.பி., கேலரியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் அமர்ந்திருந்த அவர், தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக, மேடை அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக்கருவி உதவியுடன் காங்., - எம்.எல்.ஏ., உமாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தனியார் மருத்துவமனை நேற்று தெரிவித்தது.
இது குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், 'சி.டி., ஸ்கேன் செய்து பார்த்ததில், உமாவுக்கு மூளைக்காயம் பெரிதாகவில்லை; உட்புற ரத்தப்போக்கு பற்றி கவலை இல்லை என்றாலும், நுரையீரல் காயம் சற்று மோசமாகிவிட்டது.
'இதனால், இன்னும் சில நாட்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும். நுரையீரல் காயங்களுக்கு சிகிச்சையளிக்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டு வருகின்றன' என, குறிப்பிடப்பட்டுள்ளது.