கூட இருந்தே குமாரசாமிக்கு குழிபறிக்கும் எம்.எல்.ஏ.,?
கூட இருந்தே குமாரசாமிக்கு குழிபறிக்கும் எம்.எல்.ஏ.,?
ADDED : அக் 30, 2024 04:19 AM

தேசிய கட்சியான பா.ஜ., வட மாநிலங்களில் ஆதிக்கத்தை செலுத்துகிறது. ஆனால் தென் மாநிலங்களில் வலுவாக காலுான்ற முடியவில்லை. இதற்கு இங்கிருக்கும் மாநில கட்சிகள் தான் காரணம்.
தென் மாநிலத்தில் மாநில கட்சிகளே மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால் கர்நாடகாவில் மாநில கட்சியாக இருக்கும் ம.ஜ.த.,வால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கிறது. இப்போது பா.ஜ., கூட்டணியில் இருக்கிறது.
கட்சி பதவி
ம.ஜ.த., முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் கட்சி. இதற்கு குடும்ப அரசியல் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
தேவகவுடா, அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி, ரேவண்ணாவின் மனைவி பவானி, மகன் பிரஜ்வல், இன்னொரு மகன் சூரஜ், குமாரசாமி மனைவி அனிதா, மகன் நிகில் ஆகிய அனைவருமே அரசியலில் உள்ளனர். கட்சி பதவிகளை அவர்களே அனுபவித்துக் கொள்கின்றனர்.
கட்சி ஆட்சிக்கும் வராது; தங்களுக்கு எந்த பதவியும் கிடைக்காது என்பதை உணரும் அக்கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுக்கு தாவுகின்றனர். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு ம.ஜ.த.,வில் எம்.எல்.ஏ.,வாக இருந்த சீனிவாஸ், சிவலிங்க கவுடா ஆகிய இருவரும் கட்சியில் இருந்து விலகி, காங்கிரஸில் இணைந்தனர். தேர்தலில் வெற்றி பெற்று, தற்போது வாரிய தலைவர்களாக உள்ளனர்.மேலும் சில ம.ஜ.த., தலைவர்களை இழுக்க காங்கிரஸ் திட்டம் தீட்டி உள்ளது.
தொண்டனுக்கு சீட்
இந்நிலையில் ராம்நகரின் சென்னபட்டணா தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக போட்டியிட முன்னாள் அமைச்சர் யோகேஸ்வர் ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு சீட் கொடுக்க குமாரசாமி ஒப்புக்கொள்ளவில்லை.
யோகேஸ்வரிடம் நைசாக பேசி, அவரை காங்கிரசுக்கு அழைத்து வந்து இப்போது அக்கட்சியின் வேட்பாளராக ஆக்கிவிட்டனர். “பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக போட்டியிட மாட்டேன். கட்சியின் சாதாரண தொண்டனுக்கு தான் சீட் கிடைக்கும்,” என, குமாரசாமி மகன் நிகில் கூறி வந்தார்.
ஆனால் கடைசியில், அவரே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். யோகேஸ்வரை காங்கிரசுக்கு அழைத்து வர முதலில் ஆர்வம் காட்டியது முதல்வர் சித்தராமையா தான். இதற்கு பழைய மைசூரு பகுதியை சேர்ந்த ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஒருவரும் பச்சைக்கொடி காட்டியதாக தகவல் வெளியானது.
கூட்டணி
அந்த எம்.எல்.ஏ., யார் என்று விசாரித்தபோது, மைசூரு சாமுண்டீஸ்வரி தொகுதி ஜி.டி.தேவகவுடா என்பது தெரிய வந்துள்ளது.
இவர் ம.ஜ.த.,வின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ளார். ஆனால் அவரை குமாரசாமியும், நிகிலும் சுதந்திரமாக வேலை செய்ய விடவில்லை.
அவரிடம் கேட்டு எந்த முடிவும் எடுக்கவில்லை. குறிப்பாக பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததில் அவருக்கு துளி கூட விருப்பம் இல்லை என்று சொல்லப்படுகிறது.
முதல்வர் சித்தராமையாவை 2018 தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்கடித்ததும் ஜி.டி.,தேவகவுடா தான். முதல்வருக்கு எதிராகவே அரசியல் செய்து வந்த இவர், சமீப காலமாக முதல்வருக்கு ஆதரவாக பேசுகிறார்.
'யோகேஸ்வரை காங்கிரசில் சேர்த்து சென்னபட்டணாவில் களம் இறக்குங்கள்.
அவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார்' என முதல்வருக்கு ஆலோசனை கொடுத்தது இவர் தான் என தகவல் கசிகிறது.
பிள்ளையார் சுழி
இதனால் யோகேஸ்வரிடம் முதல்வர் தரப்பில் இருந்து பேச்சு நடத்தப்பட்டது. ஆனாலும் அவர் அரைமனதாகவே இருந்தார்.
பின், துணை முதல்வர் சிவகுமார், அவரது தம்பி சுரேஷ் ஆகியோர் யோகேஸ்வரை இழுக்க முயற்சி செய்தனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மாகடி பாலகிருஷ்ணா, மத்துார் உதய் ஆகியோரை வைத்து பேச்சு நடத்தி, யோகேஸ்வரை காங்கிரசுக்கு கொண்டு வந்ததாக தெரிய வந்துள்ளது.
ஜி.டி.தேவகவுடா போட்ட பிள்ளையார் சுழி தான், யோகேஸ்வர் காங்கிரசில் இணைய காரணம். இதனால் குமாரசாமி உடன் இருந்தே அவருக்கு குழி பறிக்கிறாரா என்ற பேச்சும் எழுந்துள்ளது.
- நமது நிருபர் -