ADDED : ஜன 29, 2025 08:16 PM

பேடரஹள்ளி; மொபைல் போன் பயன்படுத்தியதை பெற்றோர் கண்டித்ததால், 13 வயது சிறுவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு பேடரஹள்ளி அருகே கொல்லரஹட்டி ரத்னாநகரில் வசிப்பவர் பசவராஜ்; பேக்கரி ஊழியர். இவரது மகன் துருவா, 13. தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்தார்.
இவர், கடந்த சில மாதங்களாக எந்த நேரம் பார்த்தாலும் மொபைல் போன் பயன்படுத்தி வந்து உள்ளார்.
இதனால் பெற்றோர் கண்டித்து வந்து உள்ளனர். ஒழுங்காக படிக்கும்படியும் அறிவுரை கூறினர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த துருவா தான் அணிந்திருந்த பேன்டை கழற்றி, மின்விசிறியில் போட்டு துாக்கிட்டு உள்ளார்.
அப்போது துருவாவின் 9 வயது தங்கையும் அங்கு இருந்துள்ளார். அண்ணன் என்ன செய்கிறார் என்று புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தார். சிறிது நேரத்தில் துருவாவின் தாய் அங்கு வந்தார்.
மகன் துாக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். துருவாவை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.
முதற்கட்ட விசாரணையில் மொபைல் போன் பயன்படுத்தியதை பெற்றோர்  கண்டித்ததால்  துருவா தற்கொலை செய்தது தெரிந்தது.
வேறு எதுவும் காரணம் உள்ளதா என்று பேடரஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

