சபரிமலை பாதைகளில் மாரடைப்பு மரணத்தை குறைக்க நவீன கருவிகள்
சபரிமலை பாதைகளில் மாரடைப்பு மரணத்தை குறைக்க நவீன கருவிகள்
ADDED : டிச 17, 2024 07:13 AM

சபரிமலை; சபரிமலை பாதைகளில் பக்தர்கள் மாரடைப்பு மூலம் மரணம் அடைவதை குறைக்க ஏ. இ. டி. என்ற ஆட்டோமேட் எக்ஸ்டேனல் டிபைபிரிலேட்டர் கருவிகளை வாங்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.
பெருவழிப்பாதையும், பம்பையில் இருந்து சன்னிதானம் வரும் நீலிமலை பாதையும் செங்குத்தான ஏற்றங்களை கொண்டவை. இதய பாதிப்பு உள்ளவர்கள் இதில் ஏறும் போது இதயத்துடிப்பு அதிகமாகி மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதற்காக நீலிமலை, அப்பாச்சிமேடு போன்ற இடங்களில் இதய நோய் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும் சில நேரங்களில் மரணம் ஏற்படுகிறது. இதை தடுத்து குறைப்பதற்காக இந்திய மருத்துவ சங்கத்துடன் இணைந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஆட்டோமேட் எக்ஸ்டேனல் டிபைபிரிலேட்டர் கருவிகளை வாங்குகிறது.
முதற்கட்டமாக ஐந்து கருவிகள் இன்னும் ஓரிரு நாட்களில் சன்னிதானம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பு ஏற்படும் பக்தருக்கு 10 நிமிடங்களுக்குள் இந்தக் கருவியின் உதவி கிடைத்தால் 80 சதவீதம் காப்பாற்றிவிடலாம் என்று சுகாதாரத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். பம்பையில் இருந்து அப்பாச்சி மேடு வரை உள்ள அவசர சிகிச்சை மையங்களில் இந்த கருவி வைக்கப்படும்.
வரும் காலங்களில் பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள பாதையில் ஒவ்வொரு அரை கிலோமீட்டரிலும் இந்த கருவி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தேவசம்போர்டு அதிகாரிகள் கூறினர்.

