இத்தாலி பிரதமரின் சுயசரிதையை 'மனதின் குரல்' என வர்ணித்தார் மோடி
இத்தாலி பிரதமரின் சுயசரிதையை 'மனதின் குரல்' என வர்ணித்தார் மோடி
ADDED : செப் 30, 2025 03:13 AM

புதுடில்லி: இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதை புத்தகத்துக்கு முன்னுரை எழுதி உள்ள பிரதமர் நரேந்திர மோடி, அதை, 'ஜார்ஜியா மெலோனியின் மனதின் குரல்' என, வர்ணித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, 48, 'ஐ ஆம் ஜார்ஜியா -- மை ரூட்ஸ், மை பிரின்சிபல்ஸ்' என்ற பெயரில் சுயசரிதை எழுதி உள்ளார்.
இதில், தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் பயணம் உள்ளிட்ட அனுபவங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
முன்னுரை நம் நாட்டில் இந்த புத்தகத்தை, 'ரூபா பப்ளிகேஷன்ஸ்' வெளியிடுகிறது. இந்திய பதிப்புக்கு, பிரதமர் மோடி முன்னுரை எழுதி உள்ளார்.
அதன் விபரம்:
இந்த புத்தகத்துக்கு பங்களித்தது, பெரிய மரியாதை. இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, தேச பக்தர் மற்றும் தலைசிறந்த சமகால தலைவர்.
அவரது தனிப்பட்ட மற்றும் அரசியல் பயணம் இந்தியர்களுடன் ஆழமாக பொருந்தி போகிறது. இந்த சுயசரிதை புத்தகம், ஜார்ஜியா மெலோனியின், 'மனதின் குரல்' போன்றது.
அவரது வாழ்க்கையும், தலைமைத்துவமும் காலத்தால் அழியாத உண்மைகளை நமக்கு நினைவூட்டுகின்றன.
அவரது ஊக்கமளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க பயணம், தலைசிறந்த சமகால அரசியல் தலைவரின் புத்துணர்ச்சியூட்டும் கதையாக இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும்.
கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதில் அவர் கொண்டுள்ள நம்பிக்கை, இந்தியாவின் சொந்த மதிப்புகளை பிரதிபலிக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
வானொலி நிகழ்ச்சி பிரதமராக பதவியேற்றது முதல், ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மன் கி பாத்' எனப்படும், 'மனதின் குரல்' என்ற அகில இந்திய வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதை புத்தகத்தை, தன் சொந்த நிகழ்ச்சியின் பெயரால் அவர் வர்ணித்துள்ளார்.