டிரம்ப் உடன் மோடி பேசவில்லை: இந்தியா திட்டவட்டம்
டிரம்ப் உடன் மோடி பேசவில்லை: இந்தியா திட்டவட்டம்
ADDED : அக் 16, 2025 06:14 PM

புதுடில்லி: '' அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசவில்லை,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.
ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அதிபர் டிரம்ப் கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால் தான் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், டிரம்ப் நிருபர்களிடம் பேசுகையில், '' ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை. பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என உறுதி அளித்தார். இந்த நடவடிக்கை, உக்ரைன் மீது தாக்குதலில் ஈடுபடும் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் '' எனத் தெரிவித்து இருந்தார். இது பரபரப்பை கிளப்பியிருந்தது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட மத்திய அரசு, '' கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவின் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும்,'' எனத் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: என்னிடம் உள்ள தகவலின்படி, நேற்று அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை.. இவ்வாறு அவர் கூறினார்.