ADDED : பிப் 22, 2024 06:52 AM

மாண்டியா: “பிரதமர் மோடியிடம், மாண்டியா 'சீட்' கேட்கவில்லை,” என, எம்.பி., சுமலதா கூறி உள்ளார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
நான் பா.ஜ.,வில் இணைவதற்கு, சட்டரீதியாக சில பிரச்னைகள் இருந்தன. இதனால் வெளியில் இருந்து, பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்தேன். பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசியபோது, மாண்டியாவில் பா.ஜ.,வை கட்டியெழுப்புவது பற்றி தான் பேசினேன். எனக்கு மாண்டியா 'சீட்' கொடுங்கள் என்று கேட்கவில்லை.
அம்பரீஷ், 25 ஆண்டுகள் காங்கிரசில் இருந்தார். இதனால் அவருக்கும், எனக்கும் காங்கிரசில் தெரிந்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். எங்கள் நலவிரும்பிகளும் அங்கு உள்ளனர். இதில் சிலர் என்னை காங்கிரசுக்கு வரும்படி அழைத்தனர்.
'சுமலதாவை யாரும் காங்கிரசுக்கு அழைக்கவில்லை. அழைத்தவர்கள் பெயரை சுமலதா சொல்லட்டும்' என, அமைச்சர் செலுவராயசாமி கூறி வருகிறார்.
அவரும், நானும் நேரில் சந்திக்கும்போது, என்னை கட்சிக்கு அழைத்தவர் யார் என சொல்கிறேன். இப்போது வெளிப்படையாகக் கூறி, என்னை கட்சிக்கு அழைத்தவர்களுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்த மாட்டேன்.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி, அரசியலுக்கு வந்தேன். அம்பரீஷ் மீது மாண்டியா மக்கள் வைத்திருந்த அன்பு தான், என்னை அரசியலுக்கு வரவழைத்தது. மாண்டியா தொகுதியில், எனது கவனத்திற்கு வந்த பிரச்னைகளை தீர்க்க, என்னால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.