டில்லிக்கு நிறைய செய்துள்ளார் மோடி முதல்வர் ரேகா குப்தா பெருமிதம்
டில்லிக்கு நிறைய செய்துள்ளார் மோடி முதல்வர் ரேகா குப்தா பெருமிதம்
ADDED : ஜூன் 10, 2025 09:25 PM

புதுடில்லி:''மத்தியில் ஆளும், பா.ஜ., அரசின் பிரதமர் மோடி, கொரோனா நேரத்தில் டில்லிக்கு ஏராளமாக செய்துள்ளார். ஆனால், அவற்றை அப்போதைய ஆம் ஆத்மி அரசு மறைத்து விட்டது,'' என, டில்லி பா.ஜ., முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
டில்லியில், மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவாவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர் ரேகா குப்தா கூறியதாவது:
கொரோனா நேரத்தை அனைவரும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். மத்தியில் அப்போது, பா.ஜ., அரசு மட்டும் இல்லை என்றால், நிலைமை எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அரசின் புள்ளிவிவரங்கள் படி, 97 குடும்பங்களுக்கு மட்டும் தான் கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது. ஆனால், எப்போதும் டில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிணக்கிடங்குகள் நிரம்பி வழிந்தன. இறந்தவர்களின் எண்ணிக்கையையும், அப்போதைய ஆம் ஆத்மி அரசு மறைத்தது.
அந்த நேரத்தில், டில்லி அரசுக்கு, மோடி அரசு தான் ஏராளமாக செய்தது. 80 லட்சம் மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. அந்த உண்மையை, அப்போதைய டில்லி அரசு மறைத்து விட்டது. மேலும், டில்லி கிராமோதயாக் யோஜனா என்ற திட்டத்தின் கீழ், 960 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கு சாலைகள் போடப்பட்டன.
யமுனை நதியை சுத்தப்படுத்தவும், நகரில் மலை போல குவிந்துள்ள குப்பையை அகற்றவும் ஏராளமாக மத்திய அரசு உதவுகிறது. ஆனால், அவற்றை முந்தைய மாநில அரசுகள் வெளிப்படுத்தவில்லை.
இவ்வாறு முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
அவர் அருகில் இருந்த, மாநில பா.ஜ., தலைவர் வீரேந்திர சச்தேவா கூறும் போது,''டில்லி மக்கள் மீது பிரதமர் மோடி அதிக நம்பிக்கை வைத்துள்ளது போல, டில்லி மக்களும் அவரை நம்புகின்றனர். பிரதமர் மோடியின் மறுசீரமைப்பு, செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகிய கொள்கைகளால் நாட்டின் வளர்ச்சி அபரிமிதமாக அமைந்துள்ளது,'' என்றார்.