சரத் பவாரை தாங்கி பிடித்த மோடி: டில்லி விழாவில் நெகிழ்ச்சி
சரத் பவாரை தாங்கி பிடித்த மோடி: டில்லி விழாவில் நெகிழ்ச்சி
ADDED : பிப் 21, 2025 09:29 PM

புதுடில்லி: டில்லியில் இன்று நடைபெற்ற மராட்டிய மொழி சம்மேளன விழாவில் பங்கேற்க வந்த சரத்பவாருக்கு பிரதமர் மோடி உதவிய செயலால் விழா அரங்கத்தில் பலத்த கரகோஷம் எழுந்தது.
அகில பாரத மராட்டிய சம்மேளனத்தின் 98வது துவக்க விழா இன்று (21.02.2025) டில்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழா வரவேற்பு குழு தலைவராக தேசியவாத காங்., மூத்த தலைவர் சரத்பவார் பங்கேற்றார்.
மரபு படி விழாவை விளக்கேற்றித் தொடங்கிய மோடி, சரத் பவாரை முன்னோக்கி வந்து மரியாதை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர், பவார் தனது உரையை முடித்துவிட்டு மோடிக்கு அடுத்த இருக்கையில் அமர வந்தார். அப்போது சரத்பவாரை கை தாங்கலாக பிடித்து இருக்கையில் அமர உதவினார், மேலும் மேடையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவருக்கு கிளாஸில் தண்ணீர் ஊற்றி கொடுத்தார். பிரதமரின் இந்த செயலை கவனித்த பார்வையாளர்கள் பலத்த கரகோஷம் எழுப்பினர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முன்னதாக மோடி தனது உரையைத் தொடங்கியதும், சரத் பவார்ஜியின் அழைப்பின் பேரில் விழாவை துவக்கி வைக்க ஒப்புக்கொண்டேன். இந்த பெருமைமிக்க பாரம்பரியத்தில் சேர எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார்.பின்னர் மோடியும், சரத்பவாரும் விழா முடியும் வரை சுவரஸ்மாக பேசிக்கொண்டனர்.