ADDED : ஜூன் 22, 2025 01:20 AM

புதுடில்லி: 'வெற்று முழக்கங்களை விடுவதில் பிரதமர் நரேந்திர மோடி கைதேர்ந்தவர். ஆனால், தீர்வுகளை வழங்குவதில் தோல்வி அடைந்தவர்' என, காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
சமூக வலைதளத்தில் ராகுல் நேற்று வெளியிட்ட பதிவு:
உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் 'மேக் இன் இந்தியா' திட்டம், இந்தியாவில் அதிகளவில் தொழிற்சாலைகள் பெருகும் என்ற வாக்குறுதியை அளித்தது.
ஆனால், உற்பத்தி ஏன் குறைந்துள்ளது? வேலையில்லா இளைஞர்களின் எண்ணிக்கை ஏன் அதிகரித்துள்ளது? சீனாவிலிருந்து இறக்குமதிகள் ஏன் இரட்டிப்பாகி உள்ளன?
பிரதமர் மோடி வாய்ஜால வித்தகர். வெற்று முழக்கங்களை விடுவதில் தேர்ச்சி பெற்றவர். ஆனால், தீர்வுகளை வழங்குவதில் தோல்வி அடைந்தவர். 2014 முதல், நம் உற்பத்தி 14 சதவீதமாக குறைந்துஉள்ளது.
மத்திய அரசு இறக்குமதியில் தான் ஆர்வம் காட்டுகிறது; உள்நாட்டு நிறுவனங்கள் பெருகுவதில் அல்ல. இறக்குமதி அதிகரிப்பால் சீனா லாபம் அடைகிறது. புதிய யோசனைகள் எதுவும் இல்லாமல், மோடி சரணடைந்து விட்டார்.
நேர்மையான சீர்திருத்தங்கள், நிதி ஆதரவு வாயிலாக லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடிப்படை மாற்றமே இந்தியாவுக்கு தேவை.
மற்றவர்களுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும். நாம் இங்கே நிறுவனங்களை உருவாக்கவில்லை என்றால், இறக்குமதி தொடரும். காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.