மோடி எப்போதுமே என் நண்பர்: டிரம்ப் அதிபரின் உணர்வை பாராட்டுகிறேன்: பிரதமர்
மோடி எப்போதுமே என் நண்பர்: டிரம்ப் அதிபரின் உணர்வை பாராட்டுகிறேன்: பிரதமர்
UPDATED : செப் 07, 2025 03:52 AM
ADDED : செப் 07, 2025 03:50 AM

புதுடில்லி : இந்தியா குறித்து, கடந்த சில மாதங்களாக எதிர்மறை கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், 'நான் எப்போதுமே மோடியுடன் நண்பராக இருப்பேன்' எனக்ககூறி திடீர், யு - டர்ன்' அடித்துள்ளார். இதற்கு, டிரம்பின் உணர்வுகளை பாராட்டுவ தாக பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.
எதிரான கருத்துகள் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு முதலில் 25 சதவீத வரி விதித்த டிரம்ப், பின்னர் அதை 50 சதவீதமாக உயர்த்தினார். இந்த விவகாரம், இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
மேலும், பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் நான்கு முறை பேச முயற்சித்ததாகவும், ஆனால், அவரின் அழைப்பை மோடி புறக்கணித்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், சீனாவின் தியான்ஜினில் சமீபத்தில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோரை சந்தித்து மோடி பேச்சு நடத்தினார்.
அப்போது, அமெரிக்க வரி விதிப்பு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
நெருக்கடியான சூழலில் மூவரும் சந்தித்து பேசியது, உலக அரசியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதையடுத்து, 'இருண்ட சீனாவிடம், ரஷ்யாவையும், இந்தியாவையும் அமெரிக்கா இழந்து விட்டது' என, தன் சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் பதிவிட்டிருந்தார்.
அ மெரிக்காவின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ உட்பட, டிரம்ப் நிர்வாக அதிகாரிகள் இந்தியாவுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், 'இந்தியாவுடனான உறவை மீட் டெடுப்பது' குறித்து, அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் நேற்று முன்தினம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், “நான் எப்போதும் அதை செய்வேன். நான் எப்போதும் மோடியுடன் நண்பராக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர். ஆனால் இந்தத் தருணத்தில் அவருடைய செயல் எனக்குப் பிடிக்கவில்லை.
சூசகம் ''இ ருப்பினும், இந்தியா - - அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் சிறப்பாகவே உள்ளது. அதனால், இதுகுறித்து கவலைப்பட ஒன்றுமில்லை.
''எப்போதாவது இதுபோன்ற தருணங்கள் ஏற்படுவதுண்டு. மற்றபடி, நான் எப்போதும் மோடியுடன் நன்றாகப் பழகி வருகிறேன். சில மாதங்களுக்கு முன் கூட, அவர் அமெரிக்கா வந்து சென்றார்,” என, தெரிவித்தார்.
இதற்கு, பிரதமர் மோடி தன் சமூக வலைதள பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், 'அதிபர் டிரம்பின் உணர்வுகளையும், இந்திய - அமெரிக்க உறவுகள் குறித்த அவரது நேர்மறையான மதிப்பீட்டையும் நான் ஆழமாகப் பாராட்டுகிறேன்.
'இந்தியாவும், அமெரிக்காவும் மிக நேர்மறையான, முன்னோக்கு சிந்தனையுடன் விரிவான மற்றும் உலகளாவிய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன' என, தெரிவித்துள்ளார். இருப்பினும், டிரம்ப் உபயோகித்த நண்பர் என்ற வார்த்தையை பிரதமர் மோ டி பயன் படுத்தவில்லை.
அமெரிக்காவின், 'திடீர்' நட்பை விரும்பாததை சூசகமாக தன் பதிலில் மோடி கூறியதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
இருப்பினும், அதிபர் டிரம்பின் மனமாற்றத்துக்கு பதிலளித்து, இரு நாட்டு உறவுகளையும் மீட்டெடுக்கும் முயற்சியில் பிரதமர் மோடி இறங்கியுள்ளதற்கும் ஆதரவு கருத்துகள் பெருகி வருகின்றன.