5 நாள் அரசு முறை பயணத்தில் 31 தலைவர்களை சந்தித்த மோடி
5 நாள் அரசு முறை பயணத்தில் 31 தலைவர்களை சந்தித்த மோடி
UPDATED : நவ 22, 2024 10:25 PM
ADDED : நவ 22, 2024 10:19 PM

புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று நாடுகளுக்கு சென்ற நிலையில், கடந்த ஐந்து நாட்களில் மட்டும், 31 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தி உள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவுக்கு, பிரதமர் மோடி கடந்த 16ம் தேதி சென்றார்.அதன்பின் 18 - 19ல், தென் அமெரிக்க நாடான பிரேசில் சென்ற பிரதமர் மோடி, அங்கு நடந்தஜி - 20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பிரேசிலில் இருந்து தென் அமெரிக்க நாடான கயானாவுக்கு கடந்த 19ம் தேதி சென்ற நிலையில், 22-ம் தேதி நாடு திரும்பினார்.ஐந்து நாள் அரசு முறை பயணத்தில், 31 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசியதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் அந்நாட்டு அதிபர் போலா அகமது டினுபுவை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசினார்.அதன்பின் பிரேசிலில் நடந்த ஜி - 20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, இந்தோனேஷியா, போர்ச்சுகல், இத்தாலி, நார்வே, பிரான்ஸ், பிரிட்டன், சிலி, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தினார்.
இதுதவிர அமெரிக்கா, சிங்கப்பூர், தென் கொரியா, எகிப்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தலைவர்களை தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதற்கிடையே அக்கூட்டத்தில், உலக வர்த்தக அமைப்பு, ஐரோப்பிய யூனியன், ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் ஆகிய சர்வதேச அமைப்புகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார்.
அதன்பின் கரீபிய நாடான கயானாவுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள டொமினிகா, பஹாமாஸ், டிரினிடாட் & டொபாகோ, சுரிநேம், பார்படோஸ், ஆன்டிகுவா, செயின்ட் லுாசியா உள்ளிட்ட தீவு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.