10 நாளில் 12 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் 29 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் மோடி திட்டம்
10 நாளில் 12 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் 29 நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் மோடி திட்டம்
ADDED : மார் 04, 2024 04:05 AM

புதுடில்லி : லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அடுத்த 10 நாட்களில், 12 மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கவும், பொதுக் கூட்டங்களில் பங்கேற்கவும் பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது; தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம். இந்நிலையில், அடுத்த 10 நாட்களில், 12 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்லவுள்ளார்.
அடிலாபாத்
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கும் அவர், பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று பேசுகிறார்.
பயண திட்டத்தின்படி, தெலுங்கானா, தமிழகம், ஒடிசா, மேற்கு வங்கம், பீஹார், ஜம்மு - காஷ்மீர், அசாம், அருணாச்சல், உத்தர பிரதேசம், குஜராத், டில்லி மற்றும் ராஜஸ்தான் என, 12 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார்.
இன்று தெலுங்கானா மாநிலம் அடிலாபாதுக்கு வரும் பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து, பொதுக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
தொடர்ந்து தமிழகத்திற்கு வரும் அவர், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் சென்று அணுமின் நிலையத்தை பார்வையிடுகிறார்; மாலையில், சென்னை நந்தனத்தில் நடக்கும் மாபெரும் பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
தமிழக பயணத்தை முடித்து, நாளை மீண்டும் தெலுங்கானாவுக்கு செல்லும் பிரதமர் மோடி, சங்கரெட்டி என்ற இடத்தில் வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைத்து, பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். தொடர்ந்து ஒடிசாவுக்கு செல்லும் அவர், அங்கும் நலத்திட்டங்களை துவக்கி வைத்து பேசுகிறார்.
சுறுசுறுப்பு
நாளை மறுதினம் மேற்கு வங்கத்தின் கோல்கட்டா, அதன்பின் பீஹாரின் பெட்டியா உள்ளிட்ட இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
வரும் 7ல், ஜம்மு - காஷ்மீருக்கு செல்லும் பிரதமர் மோடி, அன்று மாலை தலைநகர் டில்லியில் நடக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்; 8ம் தேதி, டில்லியில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றதும், அன்று மாலையே வடகிழக்கு மாநிலமான அசாம் செல்கிறார்.
தொடர்ந்து, 12ம் தேதி வரை அவர் சுறுசுறுப்பாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுடன், பொதுக் கூட்டங்களிலும் பேசுகிறார்.
இன்று சென்னை வருகிறார்
சென்னை, மார்ச் 4-
பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் 2:45 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில், செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின் நிலையத்திற்கு செல்கிறார்.
அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும், 500 மெகாவாட் திறன் உடைய பி.எப்.பி.ஆர்., அதாவது, 'புரோடோடைப் பாஸ்ட் பிரீடர் ரீஆக்டர்' எனப்படும், முன்மாதிரி விரைவு உற்பத்தி உலையில், 'கோர் லோடிங்' பணியை பார்வையிடுகிறார்.
இதை, மத்திய அரசின் 'பாவினி' நிறுவனம் உருவாக்கியுள்ளது. பின், மாலையில் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து காரில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்திற்கு மாலை 5:15 மணிக்கு வருகிறார்; தமிழக பா.ஜ., சார்பில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
பிரதமர் மோடியை வரவேற்று, பா.ஜ., சார்பில், கிண்டி மற்றும் அண்ணா சாலையில், கட்சிக் கொடிகள் கட்டப்பட்டு உள்ளதுடன், அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மோடி வருகையை ஒட்டி, சென்னையில் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். வாகன சோதனை மற்றும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பிரதமர் செல்லும் வழித்தடங்களில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு உள்ளது.
அத்துடன், சென்னை முழுதும் 29ம் தேதி வரை, 'ட்ரோன்'கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

