வெள்ளத்தில் தத்தளிக்கும் பஞ்சாப்: செப்.9ல் நேரில் ஆய்வு செய்கிறார் மோடி
வெள்ளத்தில் தத்தளிக்கும் பஞ்சாப்: செப்.9ல் நேரில் ஆய்வு செய்கிறார் மோடி
ADDED : செப் 07, 2025 12:07 PM

சண்டிகர்: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாபுக்கு செப்.9ம் தேதி பிரதமர் மோடி செல்கிறார்.
வட இந்தியாவில் கடந்த பல வாரங்களாக கனமழை கொட்டி வருகிறது. உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சல் பிரதேசம், பஞ்சாய், டில்லி என கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத கொட்டி வரும் கனமழையால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள அரசு நிர்வாகம் முழு வீச்சில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இறங்கி உள்ளது. மாநில அரசுக்கு உதவியாக, ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மக்களை காக்க தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஏற்கனவே பஞ்சாப் முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி கூறியிருந்தார்.
இந்நிலையில், மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள பஞ்சாப் மாநிலத்திற்கு பிரதமர் மோடி செப்.9ம் தேதி செல்கிறார். அங்கு செல்லும் அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார்.
இந்த அறிவிப்பை பஞ்சாப் மாநில பாஜ தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;செப்.9ம் தேதி பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூருக்கு பிரதமர் மோடி வருகிறார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரடியாக சந்திக்கிறார். அவர்களின் துயரங்களைக் கேட்கும் பிரதமர் மோடி, உரிய நடவடிக்கைகளை எடுப்பார்.
பிரதமர் மோடியின் பயணம் என்பது, மத்தியில் ஆளும் பாஜ அரசு எப்போதும் பஞ்சாப் மக்களின் துயரங்களுக்கு துணை நிற்கிறது, கடினமான நேரத்தில் அவர்களுக்கு முழு ஆதரவை வழங்கும் என்பதை காட்டுகிறது.
இவ்வாறு பாஜ தெரிவித்துள்ளது.