'தி சபர்மதி ரிப்போர்ட்' படம் அமைச்சர்களுடன் பார்த்த மோடி
'தி சபர்மதி ரிப்போர்ட்' படம் அமைச்சர்களுடன் பார்த்த மோடி
ADDED : டிச 03, 2024 01:35 AM

புதுடில்லி:குஜராத்தின் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, தி சபர்மதி ரிப்போர்ட் என்ற பாலிவுட் திரைப்படத்தை, பார்லிமென்ட் வளாகத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடன் இணைந்து நேற்று பார்த்தார்.
மிர்சாபூர் உள்ளிட்ட திரைப்படங்களின் வாயிலாக புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாசே நடிப்பில், தீரஜ் சர்ணா இயக்கிய, தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படம் கடந்த மாதம் 15ம் தேதி வெளியானது.
இது, கடந்த 2002ம் ஆண்டில் குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் டீசரை, சமூக வலைதளத்தில் சமீபத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி தன் பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தை, பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள பாலயோகி ஆடிட்டோரியத்தில் பிரதமர் மோடி நேற்று பார்த்தார். அவருடன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ், கிரண் ரிஜிஜு இணைந்து இந்த திரைப்படத்தை பார்த்தனர்.
இந்த திரைப்படத்தை பார்த்தபின் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி, 'திரைப்படத்தை தயாரித்த படக்குழுவினரின் முயற்சிக்கு பாராட்டுகள்' என, பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜிதேந்திரா கூறுகையில், “பிரதமராக பதவியேற்ற பின், தான் பார்த்த முதல் திரைப்படம் இது என, பிரதமர் மோடி தெரிவித்தது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது,” என்றார்.
தி சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்துக்கு, பா.ஜ., ஆளும் உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், ஒடிசா, ஹரியானா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்துள்ளன.