வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: கும்பாபிஷேக விழாவில் மோடி உரை
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: கும்பாபிஷேக விழாவில் மோடி உரை
ADDED : பிப் 02, 2025 06:45 PM

புதுடில்லி: இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் ஸ்ரீ சனாதன தர்ம கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
இதில் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்று கூறி தன் உரையை தொடங்கினார்.
இந்த விழாவில், இந்தோனேசியா அதிபர் பிரபோ சுபியன்டோ, முருகன் கோவில் கமிட்டி தலைவர் ஹாசிம், நிர்வாக கமிட்டி தலைவர் டாக்டர் கோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மோடி பேசுகையில், ''வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இந்தியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவு, வெறும் புவி அரசியல் தொடர்பானது மட்டும் அல்ல. பல்லாயிரம் ஆண்டு காலமாக நீடிக்கும் கலாசாரத்தின் அடிப்படையிலானது. அதன் தொடர்ச்சியாகவே இந்த விழா நடக்கிறது.
இந்த தொடர்பானது, முருகக்கடவுள், பகவான் ராமர், பகவான் புத்தரை உள்ளடக்கியது. இந்தியாவில் இருந்து யார் இந்தோனேசியா பிரம்பனம் கோவில் வந்தாலும், அவர்கள் காசி, கேதார்நாத் வந்ததை போலவே ஆன்மிக உணர்வு பெறுவர்,'' என்றார்.