ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு: காங்கிரஸ் கண்டனம்
ராஜஸ்தான் பொதுக்கூட்டத்தில் மோடி பேச்சு: காங்கிரஸ் கண்டனம்
UPDATED : ஏப் 22, 2024 12:24 PM
ADDED : ஏப் 22, 2024 11:24 AM

புதுடில்லி: நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூறியதாக பிரதமர் மோடி பேசியிருந்தார். இதற்கு காங்., கண்டனம் தெரிவித்தது.
ராஜஸ்தானில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூறினார்கள். காங்., ஆட்சிக்கு வந்தால் நமது சொத்துகள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்பவர்களுக்கு கொடுக்கப்படும். நகர்ப்புற நக்சல் சிந்தனை, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் தாலிகளைக்கூட விட்டுவைக்காது'' எனப் பேசியிருந்தார். காங்கிரஸ் ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என சொன்னதில்லை, பிரதமர் பொய் சொல்வதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், 'எந்த பிரதமரும் மோடியை போன்று தரம் தாழ்ந்து பேசியதில்லை. இதற்கு தேர்தல் ஆணையமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார்.
காங்., எம்.பி., ராகுல், ''முதல் கட்ட ஓட்டுப்பதிவில் ஏற்பட்ட ஏமாற்றத்திற்குப் பிறகு, நரேந்திர மோடியின் பொய்களின் அளவு அதிகரித்துள்ளது. பயத்தின் காரணமாக, அவர் பொதுமக்களை திசைத் திருப்புகிறார்'' என்றார். காங்., பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ''பிரதமர் மோடி துளியும் கூச்சமின்றி பொய் பேசுகிறார்'' என விமர்சித்தார்.

