ADDED : ஆக 04, 2025 02:20 AM
புதுடில்லி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் அடுத்தடுத்து சந்தித்து பேசியது, டில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து, அமளியில் ஈடுபட்டு வருவதால் பார்லிமென்டின் இரு சபைகளும் முடங்கியுள்ளன.
கடந்த மாதம் 21ம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் , 'ஆப்பரேஷன் சிந்துார் ' தொடர்பான சிறப்பு விவாதம் மட்டுமே இரு சபைகளிலும் நடந்துள்ளது.
அதே போல் கடந்த வாரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் நீட்டிப்பது தொடர்பாக தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த தீர்மானம் ராஜ்யசபாவில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அடுத்தடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேற்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து, பிரதமர் அலுவலகத்திடம் இருந்தோ அல்லது மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்திடம் இருந்தோ அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ஜனாதிபதி மாளிகையின் சமூக வலைதள பக்கத்தில் மட்டும் பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஜனாதிபதியை சந்தித்ததாக தகவல் வெளியானது.
பிரிட்டன் மற்றும் மாலத்தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு பின், ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் சந்திப்பது இதுவே முதல் முறை.
அதே போல், துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்த இரு வாரங்களுக்கு பின், பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.